2012 என்கிற ரொனால்ட் எம்மேறிச் இயக்கிய ஆங்கிலப்படம் 2009-2010 காலகட்டத்திலே வெளிவந்து சக்கைபோடு போட்டது. ஒட்டுமொத்தமாக திரைப்படம் என்று பார்த்தால் அது ஒரு மொக்கை படம் என்பது ஒருபுறமிருக்க, அதை பார்க்க வேலை வினை கெட்டு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு நான் வந்ததுவும் மறுபுறமிருக்க, அதிலே ஏகப்பட்ட உள்குத்துக்களை வைத்திருந்தார்கள் என்கிற அளவிலே படம் எனக்கு பிடித்திருந்தது. 2012 இல் உலகம் அழியும் என்கிற உலகளாவிய பயமும், சுவாரசியமும்தான் படம் ஓடியதற்கு முக்கிய காரணம் என்றாலும், அதன் காட்சி வடிவமைப்புகளும், கையாளுகையும் சிறப்பாக இருந்தன.
மயன்களின் நாட்காட்டி கூறும் உலகத்தின் முடிவு என்கிற கருத்தை அடிப்படையாகக் கொண்டு, அதன் பின்னர் உருவாகும் புதிய உலகத்தின் தோற்றத்தை அந்தப் படம் காட்டியது. எனினும், மயன்களின் நம்பிக்கை மட்டுமின்றி, உலகளாவிய அளவிலே பல கட்டுக்கதைகளின், கதைகளின், நம்பிக்கைகளின் சாரத்தை திரைக்கதையிலே அங்கங்கே உள்வாங்கி இருந்தார்கள். அத்துடன் உலகளாவிய பொது விதி ஒன்றையும் நினைவுபடுத்தி இருந்தார்கள். “அப்படியே ஒரு அழிவு வந்தாலும், செல்வாக்குள்ளவர்களும், செல்வமுள்ளவர்களும் தப்பி விடுவார்கள். அழியப்போவது மீதி மக்கள் தான்.” உலகத்தின் பொது விதி. இயற்கைத் தேர்வு கூட அதுதானே. தன்னை அனுசரித்து போவோரை மட்டும்தான் தப்ப விடுவேன் என்கிற இயற்கையின் கோட்பாடே முதலாளித்துவம் தானே.
படத்தின் கதை இதுதான். உலகத்தின் அழிவு பற்றி கிரீமி லேயருக்கு (ஒரு கேக்கை சாப்பிட அடித்துப் பிடித்து முன்னால் செல்லும் வலியவர்களுக்கு கேக்கின் கிரீம் கிடைக்கும். அடுத்து வருபவர்களுக்கு கேக்கின் உட்பகுதி. மீதி மக்களுக்கு கேக் சுற்றி வந்த காகிதம்தான் கிடைக்கும். அந்த அடிப்படையில் இனி செல்வந்தர்களையும் செல்வாக்குள்ளவர்களையும் கிரீமி லேயர் என அழைப்போம்.) கொஞ்சம் முன்கூட்டியே திரிந்து விடுகிறது, உடனே கிரீமி தப்புவதற்கு ஆயத்தங்கள் மந்தைக்கு (காகிதம் சாப்பிடுபவர்கள்) தெரியாமல் நடக்கிறது. இதற்கிடையில், கொஞ்ச சாதாரண மக்களும் இதற்குள் தப்ப ஏதுவாகிறது. கதை யாருடைய கோணத்திலே சொல்லப்படுகிறதோ, அந்தக் கூட்டமும் தப்புவதால், மகிழ்ச்சிகரமான முடிவாக முடிகிறது கதை.
(இதுதானப்பா எல்லாப் படங்களிலும் உள்ள முக்கிய குறைபாடு. கிரீமியை விமர்சித்த இந்தப் படத்திலே, கிரீமிதான் கடைசியில் நன்மை அடைகிறது, ஆனால், படத்திலே நம்மோடு பயணித்த நான்கைந்து பேர் நன்மை அடைந்ததை வைத்து ரசிகர்களுக்கு ஒரு போலியான திருப்தியை கொடுக்கிறார்கள். மிகப்பெரும் பிரச்னைக்கு மொண்ணையான தீர்வுகளை காட்டும் இத்தகைய படங்களுக்கு தமிழிலே மணிரத்னம் மிகப் பிரபலம்.)
அந்த மொக்கையையும் தவிர்த்துவிட்டு அந்தப் படத்தின் குறியீடுகளை ஆராய்வோம். விஞ்ஞான, மரபுக் கட்டுக், கட்டாத, கதைகளின் தேர்ந்த வாசிப்பே திரைக்கதையிலே தெரிகிறது. உலக அழிவுக்கு தொடக்க நிகழ்வாக பிரபஞ்சத்திலே நடக்கும் கிரகங்களின் இடப்பெயர்வும், அது போமியிலே ஏற்படுத்தும் தாக்கமும் காட்டப்படுகிறது. பூமியிலே சில விஞ்ஞானிகள் சூரிய சுவாலைகளின் தாக்கத்தால் புவியின் மக்மாவின் வெப்பநிலை கூடுவதை அவதானிக்கிறார்கள். அவர்களில் ஒருவரான அட்ரியன் அதை இந்தியாவிலே அவதானித்துவிட்டு அமெரிக்காவுக்கு சொல்ல ஓடுகிறார். அங்கெ அவரை அலட்சியம் செய்கிறார்கள், ஆனான் திரைமறைவிலே கிரீமி தப்புவதற்கும், உலகத்தின் முக்கியமானவை தப்புவதற்கும் ஏற்பாடுகள் நடக்கின்றன. (உதாரணமாக லூவர் மியூசியத்திலே இருந்த உண்மையான மோனா லிசா ஓவியம் பத்திரப்படுத்தப்பட்டு, போலி வைக்கப்படுகிறது.) கிரீமிகள் மட்டுமே தப்புவதற்கு ஏற்பாடுகள் ஜரூராக நடக்கின்றன. அதே வேளை, பணக்காரர்களுக்கு ஒரு பில்லியன் யூரோ கொடுத்து தப்பும் பயணத்திலே இணைவதற்கு டிக்கெட்டுகளும் விற்கப்படுகிறது. எல்லாமே கிரீமிக்களுக்கு மட்டுமே. சாதாரண மக்கள்? எக்கேடும் கெடலாம். என்னதான் நடக்கிறது என்பது தெரியாமல், G8 மாநாட்டிலும், வீதிகளிலும் மக்கள் மந்தைகளாக கத்தி கூப்பாடு போடுகிறார்கள். ஆனான் அவர்களுக்கு ஒன்றும் சொல்லப்படுவதில்லை. அதேவேளை, கிரீமிகளின் இந்தத் திட்டம் தெரிந்த சில பெரிய மனிதர்கள் அதனை மக்களுக்கு சொல்ல முயலும்போதெல்லாம் ‘தவறுதலாக’ விபத்துக்களில் இறக்கிறார்கள். (லூவர் மியூசியத்தின் இயக்குனர் மக்களுக்கு இதனை சொல்ல வரும் பொது கார் விபத்திலே இறக்கிறார். அதுவும் எங்கே? டயானா கார் விபத்திலே இறந்த பொன்ட் டியல்மா சுரங்கவழியிலே. கார் விபத்தும் அதே மாதிரி. இது டயானா என்கிற பெண்மணி எப்படியாக கிரீமிக்களின் உயரம் கொஞ்சமும் குறைந்துவிடக்கூடாது என்கிற காரணத்துக்காக விபத்திலே இறந்தார் என்பதை நினைக்கத் தூண்டுகிறது. கிரீமிக்களின் பலிகொடுத்தல்.) மியூசியம் இயக்குனர் மட்டுமல்லாது மேலும் பலர் இதே காரணத்துக்காக இறக்கிறார்கள்.
இப்படி அவர்கள் கசிய வைக்க நினைத்த ரகசியம் என்ன? கிரீமிக்கள் உலகமே அழியும்போது தப்புவதற்காக ஆர்க் (நோவா உலக உயிரினங்களை எல்லாம் தப்புவிக்க கட்டிய பேழை -ஆர்க்) என்கிற பெயரில் பேழைகள் தயாராகின்றன.
அப்படியாக ஆர்க்குகள் தயாராகும் விஷயம் படத்தின் நாயகன் ஜாக்சனுக்கு தெரிந்து விடுகிறது. (ஒரு தேசியப் பூங்காவுக்கு குழந்தைகளுடன் இவர் செல்லும்போது அந்த ரகசியத்தை இவர் அறியக்கூடாது என்பதற்காக இவரை அமெரிக்க ராணுவம் மிரட்டுவதை காட்டுகிறார்கள். இந்த ஒட்டுமொத்த திடத்தின் வேதனை என்ன என்றால், இதற்கு உடந்தையாகி, துணைபோகும் இராணுவ வீரர்கள், தொழிலாளர்கள் இவர்களை எல்லாம் விட்டுவிட்டுத்தான் அந்த ஆர்க் தப்பப் போகிறது.) ஜாக்சன் ஃபெயார்வேல் அட்லாண்டிஸ் என்கிற பிரபலமில்லாத புத்தகத்தை எழுதியவர். அட்லான்டிஸ் என்கிற ஒரு கண்டம் இருந்தது, அது ஒரு காலகட்டத்திலே கடலிலே மூழ்க வேண்டிய நிலைமை வந்தது, அப்போது அங்கிருந்து தப்பி எகிப்துக்கும், ஆசியாவுக்கும் ஓடி வந்தவர்களாலேயே எகிப்திய, இந்திய நாகரிகங்கள் உருவாக்கப்பட்டன எனப் போகிறது அந்தக் கட்டுக்கதை. பைபிளின் நோவாவின் பேழை கதையையும் இதையும் இணைத்து, அப்போதான ஜலப்பிரலயத்திலே அழிந்ததுதான் அட்லாண்டிஸ், தப்பிய நோவாவின் வம்சாவளிகள்தான் அந்த அறிஞர் கூட்டம் என்று அடித்து விட்டார்கள். (புக் ஒஃப் மிர்தாத் என்று ஒரு அருமையான புத்தகம் ஒன்று படித்தேன், அதிலே நோவாவின் வம்சாவளிகள் பற்றி ஒரு தத்துவரீதியான கட்டுக்கதை போகிறது. ) 1605 இல் பிரான்சிஸ் பேகன் நியூ அட்லாண்டிஸ் என்கிற புத்தகத்தை எழுதிய காலகட்டத்திலேதான் அமேரிக்கா என்கிற கண்டமே கட்டி எழுப்பப்பட்டது. எனவே அந்த மூழ்கிய கண்டம்தான் அமேரிக்கா என்று கதை போட்டார்கள். அதேபோல, ஃபெயர்வேல் அட்லாண்டிஸ் என்கிற புத்தகம் எழுதப்பட்டதும் அமேரிக்கா அழியப்போகிறது என்கிறதாக கொண்டுபோகிறார்கள்.
படத்துக்குள் வருவோம். முதலே எதிர்பார்த்தமாதிரி பூமி சூடாகிறது. உலகத்தின் பல இடங்களில் வெடிப்புக்கள் தொடங்குகின்றன. உலகமே அழியப்போகிறது என்பது புரிந்தாலும், ஊடகங்கள் கிரீமிக்கு சாதகமாக பூசி மெழுகுகின்றன. ஆனால் ஒரு கிறுக்கான ‘தீர்க்கதரிசி’க்கு இந்த்த உன்மைகள் அனைத்தும் தெரிந்திருந்தது. அவர், ஜாக்சனுக்கு இதைக் கூறுவதுடன், ஆர்க்குகளுக்கு செல்லும் வழி உள்ள வரைபடத்தையும் கொடுக்கிறார். (அந்த வரைபடத்தை அவர் தனது அலமாரியில் தேடும்போது அவர் மெர்லின் மன்றோ பற்றி கிறுக்குத்தனமாக சேர்த்துவைத்துள்ள படங்கள், புத்தகங்களின் அருகே அது இருப்பதாக காட்டுகிறார்கள். )
உலகம் அழியத் தொடங்குகிறது. படத்தின் போஸ்டர்களிலும், படத்திலும், உலகத்தின் அழிவாக பெரும்பாலும் காட்டப்பட்டது பிரேசிலில் உள்ள கிறிஸ்ட் தி ரிடீமர் (பாவங்களை கழுவும் இயேசு)சிலைதான். உலகத்தின் மனிதர்களின் கலவரங்களின்போது உடைக்கப்படும் தலைவர்களின் சிலை போல, இயற்கையின் கலவரத்தின்போது இது உடைக்கப்படுகிறது. இதன் அர்த்தம் என்ன? இயற்கையின் தலைமையில் உலகமே அழியும்போது எந்த மீட்பரும் வந்து மீட்கப்போவதில்லை, சொல்லப்போனால், மனிதர்கள் அழியும்போது அவர்களுடன் அவர்கள் தயாரித்த மதங்களும் அழிந்துவிடும், இன்னும் ஒரு அருமையான காட்சி வருகிறது. வத்திக்கானில் மைக்கேலஞ்சேலோ வரைந்த தேவன் ஆதாமை ஸ்பரிசித்து உயிர்க்கவைக்கும் காட்சியிலே சரியாக இருவரதும் தொடுகையும் பிரிபடுவதாக கூரை வெடிக்கிறது. தெய்வத்துக்கும் மனிதத்துக்கும் தொடர்பு அற்றுப்போகிறது. மனித இனத்தை இறைவன்தான் உருவாக்கினார் என்றால் ஏன் அளிக்கிறார், அல்லது அழியும்போது ஏன் பார்த்துக்கொண்டிருக்கிறார்? காப்பாற்றுவார்கள் என மனிதர்கள் நினைத்த கிரீமி மக்கள் தப்பி ஓட, தெய்வங்கள் வராமலே இருக்க, மனிதர்கள் இறக்கும்போது அவர்களின் நம்பிக்கையும் சேர்ந்து இறக்கிறது என்பதை படம் காட்டுகிறது. (இவ்வாறாக கிறிஸ்தவர்களின் நம்பிக்கைகள் மட்டுமல்ல, ஏனைய நம்பிக்கைகளும் அழிந்துபோவதாக காட்டப்படுகிறது. கஃபா இடிந்து விழுவதாக காட்டுவதாக இயக்குனர் ஒரு திட்டம் வைத்திருந்தாராம், ஆனால் அது பல பிரச்சனைகளை கிளப்பிவிடும் என்பதால் காட்டவில்லையாம். இதனை படத்தின் ஓட்டத்தோடு சேர்த்து சிந்தித்துப் பாருங்கள்.)
ஒரு தென்னமெரிக்கக் கதை இருக்கிறது. உலகம் அழியப்போகிறது, உலகம் அழியப்போகிறது என்று சொல்லிச் சொல்லி, ஒரு கட்டத்திலே உலகம் அழியத் தொடங்குகிறது. அப்போது உலக மக்களை காப்பாற்றுவதாக சொல்லிக்கொள்ளும் ஒரு மதத்தின் இரு துறவிகள் ஒரு ஊருக்கு வருகிறார்கள். அவர்களை கண்ட அந்த ஊர் மக்கள் எல்லோரும் அவர்களிடம் சென்று தங்களை காப்பாற்றுமாறு வேண்டுகிறார்கள். அவர்களோ, எதோ சொல்லி மழுப்ப, தமக்கு அழிவின் முன்னாள் பாவமன்னிப்பாவது தருமாறு கேட்கிறார்கள். அவர்களும் பணத்தை வாங்கிக்கொண்டு அனைவருக்கும் பாவமன்னிப்பு வழங்கத் தொடங்குகிறார்கள். திடீரென்று சேர்த்து வைத்திருந்த பணம் எல்லாம் சிதறி விழ, ‘இறைவனே எங்கள் பாவங்களை மன்னியும் ’ என கதறியவாறே ஓடத் தொடங்குகிறார்கள். கதை புரிகிறதா?
மதத்தை மட்டுமல்லாது அரசியல் மாயைகளையும் படம் காய்ச்சுகிறது. அமெரிக்க வெள்ளை மாளிகை கடல் பிரளயத்தொடு அடித்து வரப்பட்ட ஒரு அமெரிக்கப் போர்க்கப்பலாலேயே மோதப்படுகிறது. அமெரிக்க அதிபர் (படத்தை தயாரித்துக் கொண்டிருந்தபோது ஒபாமா அதிபராக ஆகவில்லை, ஆனால் அவர்தான் ஆவார் எனத் தெரிந்து, ஒரு கருப்பரை நடிக்க வைத்ததும், ஒருமுறை அமெரிக்க அதிபராக ஆகுபவர்தான் அடுத்த முறையும் அதிபராக ஆவார் என்பதால் உலகம் அழியும்போதும் அவரே இருப்பார் எனவும் காட்டுகிறார்கள்.) எப்படி ஒரு கப்பல் அழியும்போது அதன் கப்டன் அதனுடன் சேர்ந்து மூழ்குவரோ, அதே போல உலகம் அழியும்போது, ‘உலகத்தின் தலைவர்’ அமெரிக்க அதிபர் அதனுடன் சேர்ந்து மூழ்குகிறார். இது சர்வாதிகார ஜனநாயக முறையின் வீழ்ச்சியை காட்டுவதோடு, புதிய உலகத்திலும் இதன் தொடர்ச்சி, எச்சம் எப்படியாவது வந்துவிடும் எனக் காட்டுவதற்காக அமெரிக்க அதிபரின் மகள் தப்புவதாக காட்டுகிறார்கள்.
கிறிஸ்தவ மதம் சொன்ன நோவாவின் பேழை கூத்தே இங்கேயும் காட்டப்படுகிறது. கிரீமிக்களால் திரைமறைவிலே உருவாக்கப்பட்ட ஆர்க்குகளில் ஜலப்பிரளயம் வரும்போது தப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. நோவா செய்ததைப் போலவே, எல்லா ஜீவராசிகளின் மாதிரிகள் காப்பாற்றப்படுகின்றன. அதே வேளை கிரீமிக்கள் அல்லாத மனிதர்கள் கைவிடப்படுகிறார்கள். (எலிசபெத் மகாராணி தனது செல்லப்பிராணி நாய்களுடன், அந்த அவசரத்திலும், தனது அரச பாரம்பரியங்கள் குலையாமல் ஆர்க்குக்கு போகிறார். எதற்கும் பயனற்ற, அரசாட்சி வம்சத்தின் நீட்சி, தப்பியும் பத்து நாட்களில் செத்துவிடப்போகும் கிழவியாக, புரையோடிப்போன பழைய மரபுகள், தேவையற்றவை எனினும், அவற்றின் பக்க இணைப்புக்களோடு சேர்த்துக்கொள்ளப்படுகின்றன என்பதே அந்தக் குறியீடு. )அமெரிக்க தலைமையில் நடக்கும் இந்தத் திட்டத்திலே, அமெரிக்க சாதாராண மனிதர்கள் மறுக்கப்படுவதோடு, ரஷ்யாவின் பணக்காரர்கள் சேர்க்கப்படுகிறார்கள். உலகத்தின் உண்மையான பிரிவினை என்ன என்பதை படம் காட்டுகிறது. அதுவும் இந்தப் பிரிவினை நாடகமே ஒரு கொம்மியூனிச நாடான சீனாவில் நடப்பதாக காட்டப்படுகிறது.
பேழை - ஆர்க் |
இப்படியாக ஆங்காங்கே சில சாதாராண மக்களுக்கு சார்பான, மதங்களுக்கும், முதலாளித்துவத்துக்கும் எதிரான காட்சிகள் தென்பட்டாலும், அப்படி ஒரு மக்கள் சார்பான படமாக அது வலிந்து எடுக்கபட்டிருந்தாலும், உண்மையிலே 2012 மறைமுகமாக, அதனை எடுத்தவர்களுக்கே தெரியாமல் மதத்தையும் முதலாளித்துவத்தையும் பரப்புகிறது, ஆதரிக்கிறது. அதே அமெரிக்க மனப்பாங்கு படத்தின் அடிநாதமாக விரிந்து கிடக்கிறது.
முதலாவதாக, உயிரினங்களின் அழிவு என்பது வேறு, உலகத்தின் அழிவு என்பது வேறு. உலகம் அழிவது என்றால் பூமி என்ற கிரகமே அழிவது. இந்தப் படத்திலே காட்டப்பட்டிருப்பது, பைபிளிலே சொல்லப்பட்ட அதே உயிரினங்களின் அழிவுதானே தவிர உலகத்தின் அழிவு இல்லை. அதே பைபிளின் கதையிலே வரும், வலிமை படைத்த இறைவனுக்கு பிடித்த நோவாவும், அவனோடு சேர்ந்தோரும் தப்புவது போல, இதிலும், வலிமை படைத்தவர்களும், அவர்களுக்கு பிடித்தோரும் மட்டும்தான் தப்புகிறார்கள், நமக்கு பிடித்துப்போன படத்தின் நாயகனும், நாயகியும், குழந்தைகளும் தப்புவதால் நாம் எதோ மனித சமுதாயமே தப்பி விட்டதாக எண்ணி சந்தோஷத்துடன் படத்தை முடிக்கிறோம், ஆனால் உண்மையில் தப்புபவர்களில் ஏறத்தாள எல்லோருமே கிரீமிக்கள்தான். ஆக, படம், முதலாளித்துவமே வாழும், தக்கன தப்பும் என்பதை காட்டுகிறது.
ஒரு கறுப்பர் உலகத்தின் தலைவராக ஆனதுமே உலகம் அழிகிறது. ‘கண்டவா எல்லாம் நாட்டாமை பண்ணுறா,, கலி முத்திடுத்து..’ என்பதை ஆங்கிலத்தில் காட்டி இருக்கிறார்கள்.
உலகம் அழியவேண்டி வந்ததன் காரணமே தத்துவ ரீதியாக பார்த்தால் மனித சமுதாயத்தின் பொறுப்பற்ற தன்மையே. ஆனால் அழியும்போது, அவ்வாறு பொறுப்பற்று நடந்துகொண்ட முதலாளிகள் தப்ப, அப்பாவிகளும், பொறுப்பாக நடந்துகொண்டோரும் அழிகிறார்கள்.
உலகத்தின் அழிவிலிருந்து தப்புவதற்கு அதே மொக்கையான ஆர்க் செய்யும் ஐடியாவை பயன்படுத்துகிறார்கள். குறைந்த பட்சம் ஏதாவது விண்கலத்திலே தப்புவதாக ஆவது காட்டி இருக்கலாம். அத்தனை வலிமையான உலக அழிவு நடக்கும்போது அந்த தகர டப்பாக்கள் தப்புவதாக காட்டுகிறார்கள். இந்த உலகத்தோடு ஒப்பிடும்போது மனித மூளையின் எத்தனை உயர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி செய்த கருவியும் தப்ப முடியாது. அத்துடன் உலகத்தின் அழிவுக்கு உலகத்தின் அனைத்து மதங்களும் காட்டும் ஜலப்பிரளயத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள். ஜலப்பிரளயம் எல்லாம் உலகத்தின் முதுகை சொரியக்கூட காணாதப்பா...
மனித சமுதாயத்தின் அனைத்து மூடத்தனங்களும், வன்மங்களும் அழிவதாக குறியீடுகள் மூலம் காட்டுபவர்கள் பின்னர் அதே எல்லாம் தொடர்வதை காட்டுகிறார்கள். கிறிஸ்தவம் மடிந்ததை காட்டுபவர்கள், கிறிஸ்தவத்தின் நீட்சியான கிரகேரியன் கலண்டரை பாவிப்பதை காட்டுகிறார்கள். அதே மரபுகள், உயர்குடிக்கு ஆர்க்கிலே விமானத்திலே கிடைக்கும் மரியாதை, கறுப்பர் கருப்பரையே காமுறுவர் என்பது.. இப்படி இவர்களின் கற்பனை புத்துலகத்திலும் இதே உலகம்தான் இருக்கிறது.
ஒட்டுமொத்தமாக பார்த்தால், அதன் விறுவிறுப்பூட்டும் காட்சியமைப்பை விட, படத்திலே பெரிதாக ஒன்றுமே இல்லை. மூக்கும், காதும் நன்றாக இருக்கிறது என்பதற்காக ஒரு மூதேவியை கட்டுவது போல, சில குறியீடுகள் இருக்கிறது என்பதற்காக படத்தின் வக்கிரத்தை ஜீரணிக்கலாமா?
சாமி, நீங்க என்ன சொல்ல வரீங்க? 5000 பேர் மட்டுமே தப்பித்து போகமுடியும் அப்படிங்கற நேரத்துல, நாம யார கூட்டிட்டு போக முடியும்? அதே நேரத்துல, அமெரிக்க ஜனாதிபதி அதுல போகாம மக்களோட செத்து போவர். நம்ம ஊர்ல அந்த மாதிரி எதிர் பார்க்க வேண்டாம்.
பதிலளிநீக்குஎன்னோட கருத்து, இந்த சினிமாவ வச்சு ஒரு ரணகளத்த உருவாக்கவேண்டாமே. சினிமாவ, சினிமாவா பார்ப்போம்.
கருத்துரையிடுக