படம் பார்க்கும் திரையரங்கில் பாலூத்தும் பரதேசிகளே- 05




இதுவரை தமிழ் சினிமாவின் மாயைத்தனங்களையும், அதற்கு அடிமையான வெறியர்கள் வெறித்தனமாக நடந்து கொள்வதையும் பார்த்தோம். ஆனால் போனபதிப்பை வாசித்து விட்டு சிலர் என்னதான் உண்மையாக இருந்தாலும் இப்படியெல்லாமா எழுதுவீர்கள் என்று கேட்டிருந்தார்கள். ஆனால் என்ன செய்வது சில விடயங்களை சமூகத்தின் பார்வையிலிருந்து எழுதினால்தான் இப்படி வெறித்தனமாக நடந்து கொள்பவர்களுக்கு தங்களின் நிலை சமூகத்தில் என்ன என்று சிறிதாவது விளங்கும். எடுத்துக்காட்டாக எனக்கு தனிப்பட்ட ரீதியில் தெரிந்த இரு நண்பர்கள் முகப்புத்தகத்தில் தங்களின் பெயருக்கு பின்னால் கதாநாயகனின் பெயரை நீக்கிவிட்டு தங்களின் தந்தையின் பெயரை சேர்த்திருந்ததுடன் இப்பதிவை பகிர்ந்துவேறு இருந்தார்கள். இன்னொரு நண்பர் தன்  முகப்புத்தகத்தின் பெயர்மாற்றம் செய்யும் சந்தர்பங்கள் முடிந்துவிட்டன என்று வெளிப்படையாக கவலை தெரிவித்திருந்தார். இவ்வாறு இப்பதிவுகளை வாசித்து விட்டு ஓரிருவர் திருந்தினாலுமே அது எமக்கு வெற்றிதான்.  சர்ச்சைக்குள்ளான இதன் முன்னைய பதிவை படிக்காதவர்கள் இங்கே கிளிக்கி படித்துவிட்டு தொடரவும்.

     
                   இப்படி இவர்கள் பாலை குடம் குடமாக  ஊத்துவார்கள் , பறவைக்காவடி முதல் கொண்டு சிலுவைக்காவடி வரை சகலத்தையும் எடுப்பார்கள், கையையும் காலையும் அறுத்து இரத்தத்தை ரத்தகாவு வாங்கும் காட்டேரிகளுக்கு ஊற்றுவதுபோல் ஊற்றுவார்கள், தேங்காய் உடைப்பார்கள், கற்பூரம் ஏற்றுவார்கள், பட்டாசு வெடிப்பார்கள், பறையை முழக்குவார்கள், பைலா போடுவார்கள், இடையிடையே யாரெல்லாம் உண்மையை உணர்த்துகிறார்களோ அவர்களை எல்லாம் கூட்டமாக சென்று நையப்புடைத்து பெருமைபேசுவார்கள். இதையெல்லாம் செய்து முடித்து உலகையே காத்த கடமை வீரர்கள் போல நிற்கும் இவர்களிடம் இவர்களது நண்பர்களோ இல்லை பெற்றோரோ இல்லை இவர்கள் சம்பந்தப்பட்ட யாராவதோ “ஏனடா இப்படிஎல்லாம் வெட்டி பந்தா செய்கிறீர்கள்.... உங்களுக்கு இதனால் வரப்போவது ஒன்றுமில்லையே பிறகு ஏன் இப்பிடி.......??”என்று கேட்டால் அதற்கு கூறுவார்கள் பாருங்கள் பதில் அது நமக்கு அங்கை புரியாது வீட்டுக்கு போய் உட்கார்ந்து யோசித்தாத்தான் புரியும்.


“மாதம் முழுதும் வேலைப்பளு, குடும்ப பிரச்சனைகள், இவற்றின் மத்தியில் சிக்கித்தவிக்கும் நாங்கள் இந்த திரைப்படங்களை பார்த்துத்தான் மன அமைதியடைகிறோம். மனம் மகிழ்கிறோம் ஆகவே என்னை மகிழ்விக்கும் சந்தோசப்படுத்தும் என் கதாநாயகனை பாலூற்றிக் கௌவுரவிப்பதில் என்ன தவறு இருக்கிறது...?? பாலூற்றுவது மட்டுமல்ல சந்தர்பம் கிடைத்தால் எதையுமே செய்யத்தயாராய் இருக்கிறோம்.....”


இப்படி பாலூத்துபவர்களின் முதல் வாதமாக இருப்பது இதுதான். இவர்களை பொறுத்தவரை இது கேள்விகேட்பவர்களுக்கு கூறுவதற்காக தயாரிக்கப்பட்ட பதில்தானே தவிர உண்மையில் இவர்கள் தங்கள் வாதத்தின் பொருளை எல்லாம் அறிந்திருப்பதில்லை. அப்படி அறிந்திருப்பார்களானால் தாங்கள் கூறும் இப்பதிலே இவர்களின் பாலூத்தும் கொள்கையை கேவலப்படுத்துவதையும் அறிந்திருப்பார்கள்.


              பாலூத்தும் இந்த வெறியர் வர்க்கத்திற்கு பெரும்பாலும் 20-35 வயதுக்குள் தான் இருக்கும். இவர்களது இந்த பதில் மூலம் இவர்கள் சொல்வது என்னவெனில் இவர்களது 25,35 வருட இலட்சக்கணக்கான மணித்தியால வாழ்கையில் எங்களை கேவலம் இரண்டு மணித்தியாலங்கள் சந்தோஷமாக வைத்திருக்கும் கதாநாயகனுக்கே இவ்வளவு செய்கிறோம் என்றால் எங்கள் வாழ்கையில் எங்களை மகிழ்வித்தவர்களுக்காக எவ்வளவு செய்வோம்....?? என்பதுதான். அதாவது தங்களை மகிழ்விப்பவர்களை கடவுள் நிலையிலே வைத்து பார்ப்பார்களாம் அவ்வளவு நல்லவர்களாம் இவர்கள்.


       ஆனால் நிலைமையோ தலைகீழ் வாழ்நாள் முழுதும் இவர்களுக்காக பாடுபட்டு எந்த நேரமும் இவர்கள் நலத்தையே கருதும் இவர்கள் பெற்றோரின் காலைக்கூட தண்ணீரால் கழுவியிருக்கமாட்டார்கள் அது என்ன கையால் கூட தொட்டுவிருக்கமாட்டார்கள். அவ்வளவு ஏன் கூட்டமாய் தங்கள் நண்பர்களுடன் நின்று கதைக்கும் போதே தங்கள் தந்தையை “அவன், இவன், அப்பன் , அறுவான், விழுவான்” என்று தான் நன்றிதொனிக்க கதைப்பார்கள். ஆனால் தங்கள் நாயகனை தலைவன் என்றும் அண்ணன் என்றும் அநியாயத்துக்கு மரியாதையாக கதைப்பார்கள். இவர்கள் தங்களை மகிழ்வித்தவர்களுக்காக பாலூத்துகிறார்களாம். அப்படியானால் உங்களிடம் ஒரே கேள்விதான் வாழ்நாளில் நீங்கள் வெறும் படம் பார்க்கும் அந்த இரண்டு மணித்தியாலங்கள் தான் சந்தோசமாக இருகின்றீர்களா.....??? அப்படியானால் நீங்கள் நிச்சயமாக மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தான் சந்தேகமே இல்லை. இரண்டு மணித்தியாலம் உங்களை மகிழ்விக்கும் நாயகனுக்கு இவ்வளவு செய்யும் நீங்கள் உங்கள் பெற்றோருக்காக என்ன செய்திருக்கிறீர்கள்...??ஏன் உழைப்பேயில்லாத உங்களுக்கு படம் பார்க்க காசுதருவது அவர்கள் தானே....அவர்களை மதிப்பில்லாமல் நடத்தியதையும் அவர்களை ஏசியதையும் தவிர நீங்கள் எதுவுமே செய்ததில்லை என்பதுதான் உண்மை....அவ்வளவு ஏன் உங்களுடன் கூடச்சுற்றும் உங்கள் காதல் தோல்விகளில் ஆதரவு கூறும் உங்களுக்கு ஒன்றென்றால் துடித்துப்போகும் நண்பன் இல்லை அவனுக்காக என்ன செய்திருக்கிறீர்கள்..???
       
             உங்கள் பெற்றோர் முதல் கொண்டு நண்பன்வரை ஒரு சமூகமே உங்களை தங்கள் வாழ்வின் அங்கமாக கருதிக்கொண்டிருக்கையில் அவர்களை எல்லாம் விட்டுவிட்டு கேவலம் உங்களிடம் பணத்தைபுடிங்கி உங்களை மகிழ்வித்த நாயகனுக்கு பாலூத்துகிறீர்கள் என்றால்....என்ன சொல்வது           வாழ்க தமிழ்.....!! வளர்க தமிழ்........!!


“.....நான் உழைக்கிறேன்..... என் காசில் நான் பால் ஊற்றுகிறேன்....... நீங்கள் யார் கேட்பதற்கு......நான் ஊத்தினால் உங்களுக்கென்ன வந்தது..........”

பாலூற்றும் வெறியர்கள் அடுத்து தங்களை நியாயப்படுத்திக் கொள்வதற்காக முன்வைக்கும் வாதம் இதுதான். இவர்கள் ஏன் பொதுவாக நானுற்பட பலரது கொள்கை இதுதான் நான் உழைக்கிறேன் என்காசு என்பது.....அதனால் தான் இவர்கள் இந்த பதிலை கூறியதும் இவர்கள் சொல்வதும் நியாயம் போல் தோன்றும்.
  
             ஆனால் நானாகட்டும் நீங்களாகட்டும் யாராகட்டும் ஒருவர் கூட சமூகத்தின் ஒத்துழைப்பில்லாமல் தனிய என்காசு ,என்நலம் என்று இருந்து விடமுடியாது. எங்கள் சொந்த காசில் நாங்கள் செய்யும் செலவு பிறரை சிறிதளவிலும் பாதிக்காதவரைதான் என் காசு, என்னிஷ்டம் எனும் வாதமெல்லாம் செல்லும். நாங்கள் செய்யும் செலவு பிறரை மனதளவில் கூட பாதிக்க கூடாது என்பதுதான் இங்கே கவனிக்க வேண்டியது. என்காசுதான் என் பணம் தான் ஆனால் சமூகத்தையும் சிறிது சிந்தித்தே ஆக வேண்டும். இவ்வாறு என்காசு ,என்பணம் என்று மட்டும் சிந்திப்பவர்கள் எந்தொரு உதவியையும் சமூகத்திடம் எதிர்பார்க்ககூடாது. உதாரணமாக நாளை ஒரு விபத்தில் மாட்டி நடு ரோட்டில் விழுந்து கிடக்கும் போது சமூகத்தின் உதவியை துளியும் எதிர் பார்க்க கூடாது. நானுழைக்கிறேன் என்னக்கென்ன சமூகத்தின் மீது அக்கறை என்று கேட்பது எப்படி இருக்கின்றது என்றால் காட்டிலே மிருகங்கள் தாங்கள் பெற்ற குட்டியையே தங்கள் பசிக்கு சாப்பிட்டுவிட்டு நான்பெற்ற குட்டி நான் தின்கின்றேன் என்பது போலத்தான். ஏதோ ஒருவகையில் தன்குட்டியை தின்றதன் மூலம் தன் வருங்கால சந்ததியை அது சிதைத்துவிட்டது அல்லவா......அந்த குட்டியின் வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை அது கெடுத்துவிட்டது அல்லவா.....???

        சமூகத்தில் வாழும் ஒவ்வொருவனுமே என்பணம் என்னிஷ்டம் என நினைத்திருந்தால் இங்கு எமக்கு கிடைத்த சுதந்திரம் முதல் கொண்டு இலவசக் கல்விவரை எதையுமே சமூகத்திடம் இருந்து பெற்று கொள்ள முடியாது. அதே போலத்தான் எவருமே சமூகத்தின்  மீது துளியும் அக்கறை இல்லை என்று கூறிவிடமுடியாது.முக்கியமாக யார் கதைத்தாலும் இந்த பாலூத்தும் பரமாத்மாக்கள் இந்த வாதத்தை துளியும் முன்வைக்கமுடியாது. ஏனென்று கேட்கிறீர்களா இவர்கள் எல்லாம் சமூகத்தின் கெட்ட உதாரணங்களாக இருக்கும் பட்சத்தில் எவ்வாறு என்பணம் என்காசு என்று கதைத்துவிடமுடியும். எங்களுக்கு மட்டும் சமூகத்தின் உதவி வேண்டும். ஆனால் நாங்கள் நாளைய சமூகத்தை கெடுக்கும் ஒரு கெட்ட வேலையை செய்து கொண்டிருக்கும் போது எமக்கு ஏதோ வழியில் உதவும் அந்த சமூகத்தில் ஒருவன் ஏனிவ்வாறு செய்கிறீர்கள் என்று கேட்டால் என் பணம் என்னிஷ்டம் என்று கதைப்போமாம். நன்றாய் இருக்கிறது இவர்கள் நியாயம்......

      இவர்கள் கூறும் நியாயங்கள் இத்துடன் முடிந்து விடுமா என்ன....தொடர்ந்து பார்க்கலாம் வரும் பதிப்புக்களில்...
      
                               ...................தொடரும்..................     

Post a Comment

புதியது பழையவை