வெள்ளைமாளிகையின் கறுப்பு அடிமைகள்-01

அமெரிக்கா இன்று உலகின் உயர் பீடத்தில் இருந்து கொண்டு ஏதோ ஒரு மூலையில் இருக்கும் சின்ன நாட்டு அரசியலிலும் தன் செல்வாக்கை ஆளப்பதித்து கொண்டிருக்கும் ஒரு நாடு. மற்ற நாடு விருப்பப்பட்டோ விருப்பப்படாமலோ தன் சுயநலத்தை மட்டுமே கருத்தாய் கொண்டு அந்த நாட்டு அரசியலில் செயல்பட்டாலும் தன்னை ஒரு தலைவனாய் காட்டிக்கொள்ள முயலும் நாடு. மனித நேயத்தை பற்றி வாய்கிழிய கத்திகொண்டிருக்கும் வெளிப்படையான ஜனநாயக நாடென்றாலும் அமெரிக்கா தவிர்ந்த பிறநாடுகளுக்கு அதன் மறைவான முகம் ஒரு சாக்கடை தான் ஏன் சில நேரங்களில் அமெரிக்காவுக்கும் கூட. ஆனால் இக்கட்டுரையின் நோக்கம் அமெரிக்காவின் அரசியல் சார்ந்த பிரச்சனைகளை ஆராய்வதில்லை [இது குறித்த பதிவுகள் வெங்காயம் பதிவர்களால் பிறகு இடப்படும்] மாறாக அதன் சரித்திரத்தில் கறுப்பு பக்கங்களில் ஒன்றை பார்ப்பதே.   இன்றைய அமெரிக்காவின் இந்த உயர்வு நாற்காலி உண்மை அமெரிக்கர்களான செவ்விந்தியர்களின் நிலத்தை புடுங்கி கறுப்பர்களின் உழைப்பை விதைத்து பெறப்பட்டது. அமெரிக்கா மறக்க முயலும் ஆனால் மறக்கமுடியாத சம்பவங்கள் அதன் உள்நாட்டை பொறுத்தவரையில் பொதுவாக இரண்டு உள்ளது. ஒன்று செவ்விந்தியர்கள் மற்றது ஆபிரிக்க கறுப்பு அடிமைகள் நாம் பார்க்க போவது கறுப்பு அடிமைகளின் மீதான ஒடுக்கு முறையையையும் அவர்கள் பெற்ற விடுதலையையுமே.. அடக்குமுறை என்றால் சாதாரணமானது அல்ல நரகம் என்ற ஒன்றுக்கு விதிக்கப்பட்ட வரைவிலக்கணங்கள் அத்தனையையும் கொண்டிருந்தது அது. மேற்கொண்டு விரிவாய் பார்க்கலாம் வாருங்கள்............   

 ஆபிரிக்க கறுப்பு அடிமைகளின் வருகை


இன்று நேற்று அல்ல மன்னர்கள் காலத்திலிருந்தே அடிமைகளை வைத்திருக்கும் முறை இருந்து வந்திருக்கிறது. ஆனால் அமெரிக்காவில் நடத்தப்பட்ட அடிமைகளின் சோக வரலாறுதான் உலகிலேயே கொடுமை நிறைந்ததாக கருதப்படுகிறது. அமெரிக்காவில் பிரிட்டிஷ் காலணிகள்  ஏற்படுத்தப்பட தொடங்கி சிலகாலங்களிலேயே அடிமைகளை வைத்திருக்கும் பழக்கம் ஆரம்பித்துவிட்டது. [அமெரிக்கா என்பது பிரிட்டிஷால் குடியமர்த்தப்பட காலணிகள் பிரிட்டிஷிற்கெதிராக மேற்கொண்ட போரின் மூலம் சுதந்திரம் பெற்ற நாடு. 4 அல்லது 5 நூற்றாண்டு வரலாற்றை மட்டுமே கொண்டது அமெரிக்கா என்பது கவனிக்கத்தக்கது.] உண்மை அமெரிகர்களான செவ்விந்தியர்களிடமிருந்து பறித்துக்கொண்ட வளமிக்க நிலங்கள் ஏராளம் இருந்த போதும் அதை உரிய பராமரிப்பின் மூலம் பயன்படுத்த போதிய உழைபாளிகள் இல்லாதிருந்தது. வட அமெரிக்காவின் தென் மாநிலங்களில் ஏராளம் பருத்தி விளையும் நிலங்கள் பயனற்று போவதை பிரபுக்கள் யாரும் விரும்பியிருக்கவில்லை. மேலும் தங்களுக்கு ஏற்படும் இலாபத்தில் உழைபாளிகளுக்கு சம்பளம் கொடுப்பதையும் அவர்கள் விரும்பவில்லை. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் சம்பளம் இல்லாத நல்ல உழைபாளிகள்தான். இதற்க்கு அவர்கள் எடுத்த முடிவுதான் ஆபிரிக்க நாடுகளில் வறுமையில் வாடும் கறுப்பின உழைபாளிகளை அடிமைகளாக ஒரே கூலியில் விலை கொடுத்து வாங்குவது. இதற்க்கு ஏற்றால்போல அடிமை வியாபாரதிற்கான நிறுவனங்களும் ஆரம்பித்துவிட்டதுடன் அடிமைகளை வாங்கவும் விற்கவும் ஏராளமான இடைதரகர்கள் முளைத்தும் விட்டனர். ஆனால் ஆபிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட அடிமைகளில் ஒருசிலரைத்தவிர ஏனையோருக்கு தாங்கள் அடிமைகளாகத்தான் கொண்டுசெல்ல படுகிறோம் என்பதே தெரிந்து இருக்கவில்லை. தாங்கள் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வதாகவே எண்ணிக்கொண்டார்கள். அடிமை வியாபாரதிற்கான நிறுவனங்களும் அடிமை வியாபார இடைத்தரகர்களும் அடிமைகளிடம் சாப்பாட்டை மட்டுமே பேரமாக பேசிவிட்டு தாங்களோ ஏராளமான காசு பார்த்துக்கொண்டனர். 1638 இல்  ஓர் ஆபிரிக்க ஆண் அடிமையின் விலை 27 டொலர்கள் ஆனால் 1857 ஆம் ஆண்டு ஜார்ஜியாவில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் அடங்கிய 436 பேர் இரண்டு நாட்கள் ஏலமிடப்பட்டு 303850 டொலர்களுக்கு விற்கப்பட்டனர். தாயுடன் ஐந்து  பிள்ளைகளை கொண்ட ஒரு குடும்பதிற்க்கு 6180 டொலர்களும் தனியொரு அடிமைக்கு 1750 டொலர்களும் அதிகபட்ச்ச விலையாக தரப்பட்டது. எனவே அடிமை வியாபாரமும் பணம் சம்பாதிபதற்கு ஏற்ற தொழிலாக கருதப்பட்டது.

அடிமைகளிற்கான சட்டமும் அடிமை நிர்வாகமும்

1660 ஆம் ஆண்டு தொடங்கி அடிமைகளை நிர்வாகிபதற்காக [அடிமைகளை மனிதர்களாக கருதாது விடுவதற்காக என்பதே தகும்] சட்டதிட்டங்களும் உருவாக்கப்பட்டன. அமெரிக்கா முழுவதிலும் பொதுவான சட்டங்கள் நடைமுறையிலிருந்தாலும் மாநிலங்களுக்கும் பண்ணைகளுக்கும் ஏற்றபடி சட்டங்கள் மாறிக்கொண்டன.அதன்படி

  அடிமை என்பவன் ஒரு அசையும் சொத்து அவனை வாங்கவோ விற்கவோ முடியும். உயிலாக எழுதி விற்கமுடியும்.
  அடிமைகள் சாட்சியளிக்கமுடியாது அவர்களுக்கு ஓட்டுரிமைகள் இல்லை. திருமணம் செய்து கொள்ள முடியாது.
   பெண்ணடிமைகளுக்கு பிறக்கும் குழந்தைகள் எல்லாம் யாருக்கு பிறந்த போதிலும் எஜமானனுக்கே சொந்தம்.

இவை பொதுவாக எல்லா இடங்களிலும் பேணப்பட சட்டங்கள். ஆனால் அடிமைகள் சாட்சியளிக்க முடியாது எனும் ஒரே காரணத்தை மையப்படுத்தி அவர்களுக்கு இளைக்கப்பட்ட கொடுமைகள் ஏராளம். அதை விட கறுப்பு-வெள்ளை பிரச்சனை அடிமைகளின் மீது பாரிய கொடுமையை விதைத்தது.

                                                      ..............தொடர்ந்து பார்க்கலாம்....................

Post a Comment

புதியது பழையவை