தமிழகமே கொண்டாடி வரும் பாலாவின் படங்களை இதுவரை நான் கடுமையாக விமர்சனம் செய்து வந்தவன். அதனால் இந்த முறை ‘நான் கடவுள்’ படத்தைப் பார்க்க வேண்டாம் என்று முடிவு செய்திருந்தேன். பாலா மூன்று வருடம் உழைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்; அதற்கும் மேலாக, எனக்குப் பிடிக்கவே பிடிக்காத இளைய ராஜாவும், ஜெயமோகனும் வேறு சேர்ந்திருக்கிறார்கள். அதனால் இந்த மூவர் கூட்டணி இருக்கும் பக்கமே திரும்ப வேண்டாம் என்று இருந்து விட்டேன். எதற்குப் போக வேண்டும்; அப்புறம் திட்ட வேண்டும்?
அப்படி இருந்த போதுதான் குமுதத்தில் ஞாநி இந்தப் படத்தை ’அராஜகமான படம்’ என்று எழுதியிருந்ததைப் படித்து ஒரு நம்பிக்கைக் கீற்று துளிர் விட்டது. ஏனென்றால், ஞாநி ஒரு படத்தைத் திட்டினால் அது மிக மிக நல்ல படமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய அனுமானம்.
ஞாநியின் மூலமாகக் கிடைத்த நம்பிக்கை வெளிச்சத்துக்குப் பிறகும் ஒரு சின்ன தயக்கம். படத்தைப் பார்த்த என் நண்பர்களிடம் ஒரு கருத்துக் கணிப்பு எடுக்க ஆரம்பித்தேன். சுமார் இருபது பேரிடம் கேட்டிருப்பேன். எல்லோருமே ஒருவித மருட்சியான பதிலையே சொன்னார்கள்.
“ம்...இருக்கு...”
“அருவருப்பா இருக்கு...”
“ஆர்யாவுக்கு வேலையே இல்லை...”
“ம்...நீங்களே பாருங்களேன்...”
“படம் உங்களுக்குப் பிடித்ததா இல்லையா?” என்ற என்னுடைய நேரடியான கேள்விக்குத்தான் இப்படிப்பட்ட பூடகமான பதில்கள். இருந்தாலும் ஞாநியின் தைரியத்தில் ஒருவழியாகப் பார்க்கச் சென்று விட்டேன்.
ஐந்தே நிமிடம்தான். ஞாநி பற்றிய என்னுடைய அனுமானம் சரியே என்று தெரிந்து போயிற்று. இது பாலாவின் வழக்கமான படம் இல்லை. ருத்ரன் (ஆர்யா) வாரணாசியிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்ததுமே ஒரு உலகத்தரமான படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் ஏற்பட்டு விட்டது. அப்போதுதான் படத்தில் பிச்சைக்காரர்களும், குருடர்களும், உடல் ஊனமுற்றவர்களும், பைத்தியக்காரர்களும், குரூரமான/விசித்திரமான உருவ அமைப்புகளோடு பிறந்தவர்களும் இடம் பெறும் காட்சிகள் துவங்குகின்றன.
அகிரா குரஸவாவின் ‘The Lower Depths’ க்கு (1957) நிகரான ஒரு படத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாகவே தோன்றியது. ’The Lower Depths’ மக்ஸிம் கோர்க்கியின் நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம். அதிலும் ’நான் கடவுள்’ போலவே விளிம்பு நிலை மனிதர்கள்தான் கதை மாந்தர்கள். Lower Depths-இன் பாலியல் தொழிலாளிகள், பிச்சைக்காரர்கள், திருடர்கள் எல்லோரும் நரகத்தைப் போல் தோற்றம் தரும் ஒரு குப்பைக் கிடங்கின் பாதாள அறையில் வசிக்கிறார்கள். நான் கடவுளின் பாதாள அறை எனக்கு அகிரா குரஸவாவின் பாதாள அறையையே ஞாபகப் படுத்தியது.
ஒருவகையில் Slumdog Millionaire-ஐ விட ’நான் கடவுள்’ சிறந்ததொரு கலைப் படைப்பு என்று சொல்லலாம். உலக சினிமாவில் புனுவெல் (Luis Bunuel) மட்டும்தான் இந்த அளவுக்கு, இவ்வளவு தீவிரமான முறையில் விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றிய வாழ்க்கைச் சித்திரங்களை உருவாக்கியிருக்கிறார்.
‘நான் கடவுளி’ன் பிச்சைக்காரர்கள் அந்த பாதாள அறையில் அறிமுகமாகும் காட்சி முழுக்க முழுக்க புனுவெல், அகிரா குரஸவா போன்றவர்களின் தரத்தில் அமைந்துள்ளது. இந்தியா போன்ற மூன்றாம் உலக நாட்டின் யாரும் கண்டிராத, அல்லது, கண்டும் காணாமல் போய்க் கொண்டிருக்கும் ஒரு குரூரமான வாழ்வின் அசலான சித்திரம் இது.
தாண்டவன் என்பவன் சமூகத்தால் நிராகரிக்கப்பட்ட அனாதைகளைக் கடத்தி வந்து (பெரும்பாலும் குழந்தைகள்), அவர்களை ஊனமாக்கி, வழிபாட்டுத் தலங்களிலும், பஸ் ஸ்டாண்டு போன்ற பொது இடங்களிலும் பிச்சை எடுக்க வைத்து, அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு ஒரு தொழிலதிபரைப் போல் வாழ்கிறான். உருப்படிகளைக் கடத்திக் கொண்டு வருவதற்கு சில ஏஜெண்டுகளையும் வைத்திருக்கிறான். இந்தத் தொழிலில் இவனுக்கு உடந்தையாக இருப்பது போலீஸ். ”இப்படிப் பிச்சை எடுத்துப் பிழைப்பதை விட செத்துப் போகலாம்” என்று சொல்லும் ஒரு ஊனமுற்ற பெண்ணை சாட்டையால் அடிப்பது போல் இரும்புச் சங்கிலியில் பூட்டைக் கட்டி அடிக்கிறான். ஏற்கனவே ஒருமுறை இவள் தப்பியோட முயன்ற போது இவளுடைய தண்டுவடத்தில் கருங்கல்லால் அடித்து முடமாக்கியவன் தாண்டவன். இந்தச் சம்பவத்தைச் சொல்லும் ஒரு ஊனமுற்ற பிச்சைக்காரன் “நல்லவேளை, நான் பிறவியிலேயே ஊனமுற்றவன்; எனக்கெல்லாம் அதற்கு வேலையே இல்லை” என்கிறான்
விபச்சாரத் தொழிலில் பெண்கள் ஆடு மாடுகளைப் போல் விற்கப்படுவது போலவே இந்தப் பிச்சைக்காரத் தொழிலிலும் உருப்படிகள் வாங்கி விற்கப் படுகிறார்கள். கண் பார்வையற்ற அம்சவல்லி (பூஜா) ரயிலில் பாட்டுப் பாடி பிச்சை எடுத்துப் பிழைப்பவள். அவளுடைய குரலைக் கேட்டு அவளை அவளுடைய கும்பலிலிருந்து போலீஸின் உதவியுடன் கடத்திக் கொண்டு வந்து விடுகிறான் தாண்டவன். அவளைப் பற்றிய தகவலைக் கொடுத்த அவனுடைய ஏஜெண்ட் முருகனிடமே அவளை ஒப்படைக்கிறான்.
முருகனும் ஒரு பிச்சைக்காரிக்குப் பிறந்தவன்தான். ஆனால் அனாதைகளைக் கடத்தி விற்று ஏஜெண்டாக ஆகி விடுகிறான். அவனுடைய பாவச் செயல் அவனை உறுத்துகிறது. அந்த ஊரில் மாங்காட்டுச் சாமி என்று ஒரு சாமியார் இருக்கிறார். இரண்டு கைகளும், இரண்டு கால்களும் இல்லாமல் படம் முழுவதும் இரண்டே இரண்டு முறை மட்டுமே பேசும் இந்த மாங்காட்டுச் சாமியை (கிருஷ்ணமூர்த்தி) ஒரு பொம்மையைத் தூக்குவது போல் தூக்கிக் கொண்டு வருகிறார்கள் பக்தர்கள். அவரிடம் சென்று தனக்கு பாவ மன்னிப்பு தரும்படி வேண்டுகிறான் முருகன். சாமிக்குப் பணிவிடை செய்யும் பூசாரி “உனக்கும் உன் முதலாளிக்கும் பாவக் கணக்கு தீர்க்க வேண்டுமானால், ஊரில் இருக்கும் அத்தனை சாமியும் ஒன்று கூடி அல்லவா சேர்ந்து வர வேண்டும்” என்கிறான்.
முருகனின் கும்பலுக்கு வந்து சேரும் அம்சவல்லியை அந்தக் கும்பலில் உள்ள ஆசானும் (விக்ரமாதித்யன்) இன்னும் சில பிச்சைக்காரர்களும் ஆறுதல் வார்த்தை சொல்லித் தேற்றுகிறார்கள். ஆசான் அவனுடைய மகளால் விரட்டி விடப்பட்டவன். 4000 ரூபாய் விலை கொடுத்து ஆசானை வாங்கியிருக்கிறான் தாண்டவன். கும்பலில் மிக மோசமான முறையில் உடல் ஊனமுற்றுக் கிடக்கும் இரண்டு பேரின் விலை தலா 20,000 ரூ.
ஆரம்பக்காட்சியில் உருப்படிகளின் எண்ணிக்கையும், வசூல் கணக்கெடுப்பும் நடக்கிறது. ஒரு ஏஜெண்ட் தன்னுடைய உருப்படிகள் சரியாகக் கத்திப் பிச்சையெடுப்பதில்லை என்று புகார் செய்யும் போது, தன் பக்கத்தில் பல்லியைப் போல் கிடக்கும் ஒரு ஊனமுற்றவனின் முதுகை ரம்பத்தால் அறுத்து அவனுடைய அலறலை உதாரணமாகக் காண்பிக்கிறான் தாண்டவன். (”இப்படிக் கத்திப் பிச்சை எடுக்க வேண்டும்”).
இந்தக் காட்சியின் இடையிடையே பிச்சைக்காரர்களுக்கு எடுக்கப்படும் பயிற்சி வகுப்பிலிருந்து “அம்மா, தாயே, பிச்சைப் போடுங்க; ஐயா, சாமி, தர்மம் பண்ணுங்க; சாப்பிட்டு ரெண்டு நாள் ஆச்சு” என்ற கோரஸான குரலும் கேட்டுக் கொண்டே இருக்கிறது.
உடல் ஊனமுற்றவர்கள் என்றால் பொதுவாக நாம் கற்பனை செய்து பார்ப்பது போல் அல்ல; நரகத்தில் வசிக்கும் மனிதர்களைப் பற்றி புராணங்களிலும், இதிகாசங்களிலும் காணக் கூடிய வர்ணனைகளுக்கு ஏற்ற உருவத் தோற்றம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் அவர்கள். ஒரு அடி உயரமே உள்ள ஒரு உருப்படியை வியாபாரத்துக்குக் கொண்டு வருகிறான் ஒரு ஏஜெண்ட். அந்த உருப்படியின் கை கால்கள் வளைந்தும் நெளிந்தும் ஒரு பூச்சியைப் போல் இருக்கின்றன. அதைப் பார்த்து “நல்ல வேளை, ஆண்டவன் நமக்கு வேலையில்லாமல் பண்ணி விட்டான்; இல்லாவிட்டால் நாமே உடைக்க வேண்டியிருக்கும்; டாக்டர் செலவு மிச்சம்...” என்று மகிழ்ச்சி அடைகிறான் தாண்டவன். இவ்வளவு விபரீதமான உடலமைப்பு கொண்ட மனிதர்களை ஒரு வெர்னர் ஹெர்ஸாக் படத்திலும் (பெயர் ஞாபகம் இல்லை), ஹொடரோவ்ஸ்கியின் படங்களிலும் மட்டுமே பார்த்திருக்கிறேன்.
இந்த உருப்படிகளெல்லாம் ஹாலிவுட் சினிமாவில் நாம் காணும் க்ராஃபிக்ஸ் ஜீவராசிகள் இல்லை; எல்லா வழிபாட்டுத் தலங்களின் வாசல்களிலும் நாம் காணக் கூடிய பிச்சைக்காரர்கள்தான் இவர்கள். ஆனால் நாம் இவர்களுக்குச் சில்லறைகளைப் போட்டு விட்டு நகர்ந்து விடுவோம். ஆனால் பாலா இந்தப் பிச்சைக்காரர்களின் உலகத்துக்குள் சென்று வந்திருக்கிறார். அந்த உலகம் நாம் வாழும் கற்பனை உலகம் அல்ல; தொலைக்காட்சிப் பெட்டியும், மசாலா சினிமாவும் தரும் ஜிகினா கனவுகளால் நிரம்பியது அல்ல. அது ஒரு நிஜமான நரகம். இந்த நரகத்தை ஒரு சினிமாவில் காண்பிப்பதே அராஜகம் என்றால், இப்படி ஒரு நரகத்தை உருவாக்கி, இதில் ஒரு மனிதக் கூட்டத்தையே அடைத்து வைத்திருக்கும் இந்தச் சமூகத்தையும், இதன் அங்கத்தினர்களாகிய நம்மையும், நம்முடைய அரசாங்கத்தையும் என்ன செய்யலாம்?
ஸ்லம்டாக் மில்லியனர் படத்தை இந்துத்துவவாதிகள் தாக்குவதற்கும், ’நான் கடவுள்’ மீதான ஞாநியின் தாக்குதலுக்கும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. கலை, கலாச்சாரம், பண்பாடு போன்ற விஷயங்களை அணுகும் போது இடதுசாரிகளும், இந்துத்துவவாதிகளும் ஒத்துப் போவதும் நமக்குப் புதிதல்ல.
***
இந்தப் படத்தின் மற்றொரு சிறப்பு அம்சம், இதில் வரும் எல்லாப் பாத்திரங்களுமே ஒரு படத்தின் கதாநாயகனுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தோடு சித்தரிக்கப் பட்டிருக்கின்றனர். முருகன், ஆசான், அம்சவல்லியை 10 லட்ச ரூபாய் கொடுத்து தாண்டவனிடமிருந்து வாங்கி, அவளைத் தனது செக்ஸ் பார்ட்னராக வைத்துக் கொள்ள விரும்பும் குரூரமான முகத்தைக் கொண்ட ஒரு பணக்காரன், முருகனின் உதவியாளாக வரும் திருநங்கை, முருகன் கோஷ்டியில் வரும் பிச்சைக்காரர்கள், ஊனமுற்றவர்கள், குறிப்பாக எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும் பொடியன் (கூனன்), பெண் குரல் கொண்ட பிச்சைக்காரன், தாண்டவனின் பாதாள அறையில் வரும் நூற்றுக் கணக்கான ஊனமுற்றவர்கள், பைத்தியக்காரர்கள், ருத்ரனின் அப்பா நமச்சிவாயம், ருத்ரனின் குரு, காசியில் ருத்ரன் இருக்கும் இடத்தைக் கண்டு பிடிக்க உதவும் வட இந்திய பண்டிட் – இவர்களில் பலருக்கு படத்தில் பெயரே இல்லை என்றாலும், இவர்கள் அனைவருமே படத்தில் ஒரு கதாநாயகன் அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக, கேமரா இவர்களின் முகத்தை எப்போதும் க்ளோசப்பிலேயே காட்டுகிறது. வழக்கமான தமிழ் சினிமாவில் இதை நாம் பார்க்க முடியாது.
அதர்மமும், கொடூரமான வன்முறையும் சூழ்ந்த இந்தச் சமூகத்தின் மீதான ஒரு கலைஞனின் கோபமே ‘நான் கடவுள்’. இந்தக் கோபம் இவ்வளவு உக்கிரமாகவும், இவ்வளவு கலாபூர்வமாகவும் தமிழ் சினிமாவில் இதுவரை வெளிப்பட்டதில்லை என்றே சொல்லலாம். படத்தின் ஒவ்வொரு காட்சியும் இதற்கு சாட்சியாக இருக்கிறது. குரூரம் என்றால் அதன் உச்சபட்சமான எல்லைக்குச் சென்றிருக்கிறார் பாலா. உதாரணமாக, அம்சவல்லியை 10 லட்சத்துக்கு வாங்க முயற்சிப்பவனின் முகம் ஒரு மம்மியைப் போல் இருக்கிறது. இது ஹாலிவுட் ஒப்பனைக்காரனை கோடம்பாக்கத்துக்கு வரவழைத்துச் செய்யப்பட்டதல்ல; இயற்கையின் வினோத, விபரீத, கோர வெளிப்பாடுகளில் ஒன்றாக வருகிறது.
பாலாவுக்கு இந்தச் சமூகத்தின் மீது ஏன் இவ்வளவு கோபம் என யோசித்தேன். பெரியாரிடம் கேட்பார்களாம், ஏன் இவ்வளவு கடுமையான மொழியைப் பயன்படுத்துகிறீர்கள் என்று. (கடவுளை நம்புபவன் முட்டாள், பரப்புபவன் அயோக்கியன், இத்யாதி). அதற்குப் பெரியார் சொன்ன பதில்: ”தமிழர்கள் பல நூற்றாண்டுகளாக உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்; அதனால் அவர்களை சவுக்கால் அடித்தால்தான் எழுந்து கொள்வார்கள்.” அந்த வாசகம்தான் பாலாவின் கோபத்தைப் பார்க்கும் போது ஞாபகம் வந்தது. ஆனால் பெரியார் சொன்னதும் நடக்கவில்லை. சவுக்கடியைக் கூட ஏதோ எறும்புக்கடி என்று நினைத்து ஒதுக்கி விட்டுத் தூங்கிக் கொண்டிருக்கிறது தமிழ்ச் சமூகம். அதைத்தான் விளாறு விளாறு என்று விளாறியிருக்கிறார் பாலா. அதனால்தான் தமிழர்கள் இந்தப் படத்தைப் பற்றித் தெளிவாக எதுவும் சொல்ல முடியாமல் பம்முகிறார்கள்.
***
ஸ்லம்டாக் மில்லியனர் படத்தை விட ’நான் கடவுள்’ பல மடங்கு சிறப்பு வாய்ந்த படம். ஆனாலும் ஸ்லம்டாக் உலக அளவில் பேசப் படுவதைப் போல் நான் கடவுள் பேசப் படாது. காரணம், மொழி அல்ல. ஈரானியத் திரைப்படங்கள் புகழ் பெற்றிருப்பதற்கு மொழி ஒரு தடையாக இல்லை. அப்படியானால் என்ன காரணம்?
இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, இளையராஜா. பாலா எந்த அளவுக்கு இந்தப் படத்தை புனுவெல், குரஸவா தரத்துக்கு உயர்த்திச் செல்கிறாரோ அந்த அளவுக்கு இளையராஜா இந்தப் படத்தை ராமராஜனின் ’கரகாட்டக்காரன்’ தரத்துக்குக் கீழே இழுக்கிறார். நான் ஏதோ இதை சொந்த விருப்பு வெறுப்பினால் சொல்லவில்லை.
படத்தின் ஆரம்பமே காசியும், கங்கையும்தான். இந்த உலகத்திலேயே மரணத்திற்காக ஒரு நகரம் உண்டென்றால் அது காசிதான். மனித வாழ்வில் மரணத்தைப் போன்ற ஒரு புதிர் வேறு எதுவும் கிடையாது. மனிதனுக்கு எப்போது மரணம் வரும் என்று தெரியாது. சில உயிர்கள் கர்ப்பத்திலேயே மரணத்தைக் கண்டு விடுகின்றன. சில உயிர்களுக்கு நூறு ஆண்டுகள். மரணத்திற்குப் பிறகு என்ன ஆகிறது? யாருக்கும் தெரியாது. எல்லாமே மனித அறிவுக்கு அப்பாற்பட்ட புதிர்கள். மரணத்தைக் கண்டு மனிதன் அஞ்சுகிறான். மரணத்தைக் கூடிய வரை ஒத்திப் போட எண்ணுகிறான். மரணத்தின் தர்க்கம் யாருக்குமே புரிவதில்லை. ஏழை பணக்காரன், ஆண் பெண், நல்லவன் கெட்டவன் என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல் அது பாட்டுக்கு வருகிறது, போகிறது. இவ்வளவு புதிரான ஒரு விஷயத்திற்கு இளையராஜா ஒரு ரொமாண்டிக்கான இசையைக் கொடுத்திருக்கிறார். மனித சமூகமே கண்டு நடுங்கும் மரணத்தை ரொமாண்டிக்காகப் பார்த்த ஒரே மனிதர் இளையராஜாவாகத்தான் இருக்க முடியும்.
அதுவாவது போகட்டும். ஆனால், கண்பார்வையற்ற பிச்சைக்காரி ஒருத்தி ரயிலில் பாடிப் பிச்சையெடுக்கும் போது அதன் பின்னணியில் நூறு வயலின்களும், தப்லா, ஆர்மோனியம் போன்ற இன்னபிற ஆர்க்கெஸ்ட்ராவும் ஒலிக்குமா என்ன?
அம்சவல்லி ரயிலில் பாடிப் பிச்சை எடுக்கிறாள். அவளுடைய இனிமையான குரலே அவளுக்கு ஆபத்தாகி விடுகிறது. ஒரு குடும்பம் போல் பழகிய அவளுடைய கோஷ்டியிலிருந்து கடத்தப்படுகிறாள். இதேபோல் ஸ்லம்டாகிலும் ஒரு காட்சி வ்ருகிறது. சேரிக் குழந்தைகளையும், அனாதைகளையும் கடத்தி வந்து அவர்களின் கை கால்களை உடைத்தும், கண்களைக் குருடாக்கியும் பிச்சை எடுக்க வைத்து வாழும் ஒருவன். சிறுவர்களை வரிசையாக நிற்க வைத்து, அவர்களை ‘தர்ஷன் தோ கன்ஷ்யாம் நாத் மோரி அங்கியா(ங்) ப்யாசி ரே’ என்ற பாடலைப் பாடச் சொல்கிறான். எல்லோரையும் விட நன்றாகப் பாடும் ஒரு சிறுவனைத் தேர்ந்தெடுத்து அவனுடைய கண்கள் குருடாக்குகிறான். பின்னாளில் அந்தச் சிறுவன் சுரங்க நடைபாதையில் நின்று அதே பாடலைப் பாடிப் பிச்சையெடுக்கிறான். அப்போது, முன்பு அந்தக் கூட்டத்தில் சரியாகப் பாடாமல் தப்பியோடிய சிறுவன் இவனைச் சந்திக்க நேர்கிறது. ஸ்லம்டாக் படத்தின் மிக முக்கியமான காட்சிகளில் ஒன்று இது.
’தர்ஷன் தோ கன்ஷ்யாம் நாத் மோரி அங்கியா(ங்) ப்யாசி ரே’ (என் கண்கள் தாகமாக இருக்கின்றன; எனக்கு தரிசனம் கொடு கன்ஷ்யாம் நாதரே) என்று ஒரு கண்பார்வை அற்றவன் பாடும்போது அதில் ஏற்படும் காவியத் துயரத்தையும், அபத்த உணர்வையும் பற்றி இங்கே பேச இடம் இல்லை. ஆனால், அந்தப் பாடலை சிறுவன் பாடும் இரண்டு தருணங்களிலும் பின்னணியில் அல்லா ரக்கா ரஹ்மானின் பிரம்மாண்டமான ஆர்க்கெஸ்ட்ரா ஒலிக்கவில்லை. ஒரு கண்பார்வையற்ற பிச்சைக்காரன் தெருவோரத்தில் பாடும்போது எப்படி இருக்குமோ அதே மாதிரிதான் இருக்கிறது இசையும். அப்படியில்லாமல் அம்சவல்லி பாடும் தருணங்களில் எல்லாம் ராமராஜனின் கரகாட்டக்காரனுக்கு அமைப்பது போல் பின்னணி இசை தந்திருக்கிறார் இளையராஜா. எவ்வளவுதான் உயர்ந்த கலைப்படைப்பாக இருந்தாலும், இப்படிப்பட்ட இசை அந்தப் படத்தின் நம்பகத்தன்மையைக் குலைத்து மசாலா படமாக ஆக்கிவிடும்.
ஒரு தனியான குகையில் வசிக்கும் ருத்ரனைச் சந்தித்து அவனுக்குத் தாயின் அருமையைப் பற்றி அறிவுரை சொல்லும் போதும் அம்சவல்லி ஒரு பாட்டு பாடுகிறாள். “தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை; தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” என்ற அந்தப் பாடலைப் பாடும் போது கூட அப்படியே அந்தப் பழைய சினிமாப் பாடலை லௌட் ஸ்பீக்கரில் ஒலிக்க வைப்பது போல் ஒலிக்க வைத்து விடுகிறார் மேஸ்ட்ரோ. குகைக்குள் எங்கே இருந்து வந்தது அவ்வளவு பெரிய ஆர்க்கெஸ்ட்ரா? இது எப்படி இருக்கிறது என்றால், நீங்கள் உங்கள் காதலியோடு அந்தரங்கமாகப் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென்று உங்கள் வாயிலிருந்து ‘அன்பே வா’ படத்தில் எம்ஜியார் சரோஜாதேவியிடம் பேசிய காதல் வசனம் எம்ஜியார் குரலிலேயே வந்தால் (அல்லது, வீரப்பா குரலைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்) உங்கள் காதலி பயந்து போவாளா இல்லையா? அப்படியேதான் அம்சவல்லி பாடும் போதெல்லாம் நானும் பயந்து போனேன்.
’நான் கடவுள்’ காட்சிகள் ஒவ்வொன்றும் புனுவெல் படத்தைப் பார்ப்பது போல் இருக்கின்றன; ஆனால் இசையோ மீண்டும் மீண்டும் கரகாட்டக்காரன் தரத்துக்கே இழுக்கிறது. மேலும், ஒரு உதாரணம். ’பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேனே, ஐயனே, என் ஐயனே’ என்ற பாடல் காட்சி. இதில், இந்திய சமூக வாழ்வு இந்த மக்களில் ஒரு பகுதியினருக்கு எப்படி ஒரு நரகத்தை வாழக் கொடுத்திருக்கிறது என்ற குரூரமான நிஜம் பல சலனக் காட்சிகளாய்ப் பதிவு செய்யப் பட்டிருக்கிறது. இரண்டு கால்களும் வளைந்த ஒரு பெண் தனது ஒற்றைக் காலைத் தூக்கிக் காட்டி பிச்சையெடுக்கிறாள்; ஒரு அலுமினியத் தட்டில் கிடக்கும் நாணயங்கள்; துர்க்கையைப் போல் வேடமணிந்த அவலட்சணமான தோற்றம் கொண்ட ஒரு பிச்சைக்காரி, எப்போதும் தன் பற்களைக் காட்டிச் சிரித்துக் கொண்டேயிருக்கும் கூனன், மடியில் ஒரு குழந்தையோடு பிச்சையெடுக்கும் ஆசான், ரயில் பிச்சை, பஸ்ஸின் ஜன்னல் வழியே பிச்சை, சிறுவர்கள் கூட்டத்துக்குப் பிச்சையெடுக்கக் கற்றுத் தரும் ஏஜெண்ட், உடம்பு பூராவும் வளைந்தும் நெளிந்துமிருக்கும் ஒருவன் நகர்ந்தபடியே பஸ்ஸில் எடுக்கும் பிச்சை, சாக்கு சாக்காக வரும் நாணயங்களை எடை போட்டு அள்ளிக் கொண்டிருக்கும் முருகன், முருகன் கோஷ்டிக்கு உணவு பரிமாறும் திருநங்கை, தன்னுடைய கோஷ்டியில் இருக்கும் இரண்டு கூனன்களுக்கும் சோறு ஊட்டி விடும் முருகன், பிச்சைக்காரர்களின் ஆட்டமும் பாட்டமும், முருகனுக்கு (இது வேறு முருகன்) காவடி தூக்கிச் செல்லும் பக்தர்கள், அந்த பக்தர்களிடம் தவழ்ந்து தவழ்ந்து சென்று பிச்சை கேட்கும் கால் ஊனமுற்ற அனுமார், மலைக்கோவிலின் படிக்கட்டுகளில் அமர்ந்து பிச்சை கேட்கும் சிவ பெருமான், ஒரு சிறுமியின் இரண்டு கால்களையும் தனது இரண்டு கை விரல்களில் தாங்கி அந்தரத்தில் நிற்க வைத்தும், உடம்பை வில்லாய் வளைத்தும் மக்களை சந்தோஷப் படுத்தி பிச்சை கேட்கும் கழைக் கூத்தாடிகள் (அதில் ஒரு கிழவன் குரங்கைப் போல் குட்டிக் கரணம் அடிக்கிறான்; மூன்று குச்சிகளை வைத்து எந்தக் குச்சியும் கீழே விழாமல் வித்தை செய்கிறான்; வளையங்களை உடம்பில் பொருத்தி கீழே விழாமல் சுற்றுகிறான்; மற்றொருவன் நெருப்பு வளையத்துக்குள்ளும், கூர்மையான கத்திகள் செருகப் பட்ட வளையத்துக்குள்ளும் புகுந்து காட்டுகிறான்); சாம்பிராணி புகை போட்டு கடைகளில் பிச்சை எடுப்பவர்கள்; பிச்சை எடுக்கும் அரவானிகள், நடக்க முடியாத ஒரு பெண்ணைத் தன் முதுகில் சுமந்தபடி பிச்சை எடுக்கும் ஒருவன், நேர்த்திக் கடனுக்காக பிச்சைக்காரர்களுக்கு இலையில் சோறு பரிமாறும் பக்தர் கூட்டம், பிச்சைக்காக தன் உடம்பில் சவுக்கால் அடித்துக் கொள்ளும் ஒருவன்…
இருளாலும், நம்பிக்கையின்மையாலும் சூழப்பட்ட இந்தியாவின் நரகம் இது. இதே போன்ற ஒரு காட்சி ஸ்லம்டாகிலும் வருகிறது. படத்தின் ஆரம்பத்தில் மும்பையின் சேரிப் பகுதி பற்றிய அறிமுகக் காட்சி அது. அல்லா ரக்கா ரஹ்மானின் குரலும், இலங்கைத் தமிழரான மாதங்கி மாயாவின் ராப் பாடலும் கலந்த ஒரு இசை அது. ’ஓ சாயா’ என்ற அந்தப் பாடல் ஆஸ்கருக்குப் பரிந்துரை செய்யப் பட்டுள்ளது. என் அனுமானம் சரியாக இருக்குமானால் நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கும் போது அந்தப் பாடலுக்கு ஆஸ்கர் பரிசு கிடைக்கும். ஆனால், நரகத்தின் குரல்களை ஒரு க்ளாஸிக் என்ற அளவுக்குக் காண்பித்திருக்கும் பாலாவின் காட்சிப் படிமங்களுக்கு நம்முடைய மேஸ்ட்ரோ என்ன இசை அமைத்திருக்கிறார் தெரியுமா? ”பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன், ஐயனே, என் ஐயனே.” மேஸ்ட்ரோவின் குரலில் இந்தப் பாடலைக் கேட்கும் போது ஏற்படும் உணர்வு, அம்பானி அமிதாப் பச்சன் போன்ற கோடீஸ்வரர்கள் மும்பை விநாயகர் கோவிலுக்கு நேர்த்திக் கடன் செய்வதற்காக தங்கத்தால் ஆன பிச்சைப் பாத்திரம் ஒன்றை ஏந்திச் செல்வார்கள்; குருத்வாராவுக்குச் சென்று பக்தர்களின் செருப்புகளைச் சுத்தம் செய்வார்கள். (வருங்காலப் பிரதம மந்திரி ராகுல் காந்தி தலித் குடிசையில் ஓர் இரவு தங்கியதை நினைவு கூர்க). அம்மாதிரி பக்திப் பரவசக் காட்சிகளுக்கு வேண்டுமானால் மேஸ்ட்ரோவின் இந்தப் பாடல் பொருத்தமாக இருக்குமே ஒழிய, ரத்தமும் சதையும் நிணமும் சளியும் அழுகி ஒழுகும் பாலாவின் பிச்சைக்காரர்களின் வேதனைக் குரலுக்குப் பொருத்தமாக இல்லை.
’பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்’ பாடல் எனக்கு ’மன்னன்’ படத்தில் ரஜினிகாந்துக்காக மேஸ்ட்ரோ பாடும் “அம்மா என்று அழைக்காத உயிரும் உண்டோ” என்ற ‘செண்ட்டி’ பாட்டையும் நினைவு படுத்தியது.
இப்படி இருந்தால் தமிழ் சினிமாவை உலக அளவில் எப்படி விவாதிப்பார்கள்? உலகின் மிக முக்கியமான காவியப் படைப்புகளில் (Epic) ஒன்றாகப் பேசப் பட்டிருக்க வேண்டிய இந்தப் படத்தை, மசாலா சினிமாவாக மாற்றும் மேஸ்ட்ரோவின் கைங்கரியத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். அம்சவல்லியை விற்பதற்காகத் தூக்கிக் கொண்டு போகும் போதும் இதே மாதிரியான ரொமாண்டிக் இசைதான் நம் செவிகளை வட்டமடிக்கிறது.
பாலா உட்பட இளையராஜாவின் ரசிகர்கள் யாரும் என் மீது கோபப்படாமல் ஒருமுறை அகிரா குரஸவாவின் Lower Depths –ஐப் பார்க்கும் படி சிபாரிசு செய்கிறேன். அதற்கு இசையமைத்தவர் Masaru Sato. இம்மாதிரி படங்களில் இசை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம் மஸாரு ஸாட்டோவின் இசை.
***
படத்தில் பாலாவுக்கு இணையாகப் பங்களிப்புச் செய்திருப்பவர்கள் என இரண்டு பேரைக் குறிப்பிடலாம். ஒருவர், ஆர்ட் டைரக்டர் பி. கிருஷ்ணமூர்த்தி; மற்றொருவர், ஜெயமோகன். இவர்கள் இருவருமே இலக்கியத் தொடர்பு உடையவர்கள் என்பதை இங்கே குறித்துக் கொள்ள வேண்டும். பாலா என்ன நினைத்தாரோ அதைப் பேசி இருக்கிறார் ஜெயமோகன். இதைப் பற்றித் தனியாகவே ஒரு கட்டுரை எழுதலாம். பார்வையாளர்கள் படத்தோடு ஒன்றி ரசிப்பதற்கு ஜெயமோகனின் வசனம் பெரும்பங்கு வகிக்கிறது. நரகத்தைப் பற்றிய குரூரமான காட்சிப் படிமங்களாக இருந்தாலும், படம் நெடுகிலும் ப்ளாக் ஹ்யூமர் என்று சொல்லப்படும் அவல நகைச்சுவை பார்வையாளரைப் படத்தின் உள்ளே இழுத்துக் கொண்டே செல்கிறது.
ஏஜெண்ட் முருகன், மாங்காட்டு சாமியிடம் தனது பாவக் கணக்கைத் தீர்க்கச் சொல்லி வேண்டிக் கொள்ளும் போது அங்கே இருக்கும் ஒரு சாமியார் பிச்சைக்காரன் ”இவன் பாவக் கணக்கையும், இவன் முதலாளியின் பாவக் கணக்கையும் தீர்க்கணும்னா ஊர்ல இருக்கிற மொத்த சாமியும் வந்தாக் கூட முடியாதே” என்று சொல்கிறான்.
ஒரு கட்டத்தில் ஏஜெண்ட் முருகன் கூனனிடம் வந்து “எப்பப் பார்த்தாலும் இப்படி சிரிச்சுக் கிட்டே இருக்காதடா; யாரும் பிச்சைப் போட மாட்டாங்க” என்று கெஞ்சும் போது கூனன் “என்ன முருகா இது, பிச்சைக்காரன் கிட்டயே பிச்சை எடுக்கிறியே” என்று நக்கல் செய்கிறான்.
அதேபோல் அம்பானியைப் போல் பணக்காரனாகிவிட வேண்டும் என்று கூனன் சொல்ல, அது யார் என்று கேட்கிறான் பெண்குரல். அதற்குக் கூனன் “இந்த செல்ஃபோன் விய்க்கிற பய அண்ணே, அதெல்லாம் உனக்குத் தெரியாது” என்று சொல்வது...
இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். மற்றொரு முக்கியமான இடம், முருகனின் பிச்சைக்கார கோஷ்டி மருதமலைக்குச் செல்வது. தமிழ்க் கடவுள்கள் மலைக்கு மேலேதானே வசிப்பது வழக்கம்? அங்கே போய் பிச்சை எடுக்கலாம் என்று மருதமலையின் மேலே ஏறுகிறது கோஷ்டி. கோஷ்டியில் எல்லாருமே ஊனமுற்றவர்கள் என்றபடியால் மலையேற்றம் சிரமமாக இருக்கிறது. மேலே நடக்க முடியவில்லை. சிவன், துர்க்கை, முருகப் பெருமான், அனுமார், ராமர் என்று எல்லா ’கடவுள்களும்’ மூச்சு இரைக்க இரைக்க ஒரு இடத்தில் அமர்கின்றனர். லௌட்ஸ்பீக்கரில் டி.எம். சௌந்தர்ராஜனின் “மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க” என்ற பாடல் செவிச் சவ்வுகளைக் கிழிக்கும்படி மலை பூராவும் எதிரொலிக்கிறது. அப்போது அந்த கோஷ்டியில் பெண் குரலில் பேசுபவன் “இவன் ஏன் இந்தக் கதறு கதறுகிறான்; விட்டால் நம்மோடு சேர்ந்து பிச்சை எடுப்பான் போலிருக்கிறதே?” என்கிறான். தொடர்ந்து முருகன் வேடமிட்டவனைப் பார்த்து “ஏன்டா ஞானப் பழம், எங்கடா இருக்கு அந்த மருதமல?” என்று அலுப்புடன் கேட்கிறான்.
பிறகு ராமர் வேடமிட்டவனைப் பார்த்துக் கிண்டல் செய்கிறான். அப்போது, “ஏய், யாரும் ராமரைக் கிண்டல் செய்யாதீர்கள்; அவன் பின்னால்தான் இன்னிக்கு எல்லோருமே இருக்காங்க; அவன்தான் இன்னிக்கு சூப்பர் ஸ்டார்” என்று சொல்கிறாள் திருநங்கை. உடனே பெண் குரலில் பேசுபவன் “அப்போ அவனையே முதல் மந்திரி ஆக்கிடுவோம்” என்கிறான். தொடர்ந்து யார் ஃபாரஸ்ட் மந்திரி, யார் குடும்பக் கட்டுப்பாடு மந்திரி, யார் நிதி மந்திரி என்று ஒவ்வொருத்தனுக்காக துறைகள் பிரிக்கப் படுகின்றன. கடைசியில் துறை பிரித்த பெண்குரல்காரனுக்கு என்ன துறை என்று பார்த்தால் அவன் ஜனாதிபதி!
எவ்வளவு பெரிய அரசியல் பகடி! தமிழ்நாட்டின் அரசியல் எதார்த்தத்தை இவ்வளவு பச்சையாகச் சொல்லி பகடி செய்ய ஒருவருக்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும்!
நரகத்தைப் பற்றிய படமாகவே இருந்தாலும் இதை ஒரு பின்நவீனத்துவ க்ளாஸிக்காக மாற்றுவது இதன் அரசியல் பகடிதான் என்று சொல்லலாம். அம்சவல்லியை தாண்டவனிடம் அனுப்புவதற்காக அம்சவல்லியின் கோஷ்டியை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்கிறார்கள் போலீஸ்காரர்கள். இன்ஸ்பெக்டர் வரும் வரை கொஞ்சம் பாட்டுப் பாடி, டான்ஸ் ஆடி போலீசை மகிழ்விக்கிறது கோஷ்டி. முதலில் எம்ஜியார் வேடமிட்டவன். “கண்ணை நம்பாதே; உன்னை ஏமாற்றும்” என்ற பாடலைப் பாடி ஆடுகிறார் எம்ஜியார். இந்தப் பாட்டைக் கேட்டு சிவாஜி எம்ஜியாரிடம் ”உங்கள் பாட்டையெல்லாம் கேட்டு விட்டு எல்லோரும் ஓட்டை மட்டும்தானே போட்டான்; ஒருத்தனும் திருந்தலியே?” என்று தனது பாணியில் சொல்கிறார்.
இதையெல்லாம் ஒரு பக்கம் நின்று பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த் (பாட்ஷா வேஷம்). அடுத்து வருகிறது சிவாஜியின் ஆட்டம் பாட்டம். “ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன், ஏன், ஏன், ஏன்?” பாடல். இந்தப் பாடலைக் கேட்டு ரஜினி பின்னந்தலை மயிரை ஸ்டைலாக கோதிக் கொள்கிறார். அப்போது எம்ஜியார் “தம்பி கணேசா, இப்போ இருக்கிற நண்டு சுண்டு நடிகனுக்கெல்லாம் உன் நடிப்பில் கொஞ்சமாவது சொல்லிக் குடுத்துட்டுப் போயிருக்கக் கூடாதா?” என்று கேட்கிறார். தொடர்ந்து இப்போதைய சினிமா நடிகர்களைப் பற்றிய பகடி. அப்போது போலீஸ்காரர் “நேத்து ஒரு படம் பார்த்தேன். அந்த கீரோ மட்டும் என் கையில கிடைச்சான், அவனை அம்மணக்கட்டையா ஆக்கி அடிச்சே கொன்னுருப்பேன்” என்று சொல்ல, உடனே ரஜினி “கண்ணா, அவன் நடிச்சுக் கொன்னான்னா நீ அடிச்சுக் கொல்லாதே; அராஜகத்தை விட்டுட்டு அன்பால திருத்தப் பார், அன்பால, அன்பால” என்கிறார். உடனே போலீஸ்காரர் “அதெல்லாம் இருக்கட்டும், நீங்க ஒத்தக் கால்ல நிக்காதீங்க; ஸ்டேஷனுக்கு ஆகாது” என்கிறார்.
அடுத்து, ’அம்மாடி ஆத்தாடி’ என்ற சிம்புவின் பாடலுக்கு நயன் தாரா ஆடுகிறாள். இந்தக் காட்சியைப் பார்த்து இப்போதைய மசாலா சினிமாக்காரர்கள் அத்தனை பேரும் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாக வேண்டும். அந்த அளவுக்கு அவர்களை உண்டு இல்லை என்று பண்ணியிருக்கிறார் பாலா. வெறும் ஜட்டி, ப்ரா மட்டும் போட்டுக் கொண்டு, மிகப் பெரிய தொப்பையுடன் இடுப்புக்குக் கீழ்ப்பகுதியை முன்னே கொண்டு வந்து ஆட்டி ஆட்டி ஆடுகிறாள் நயன்தாரா வேடமிட்ட அந்தப் பெண். இந்தப் பாடலை வெகுவாக ரசிக்கும் அந்த ஸ்டேஷனின் பெண் போலீஸ், பாடலை ரசித்து விசில் அடிக்கும் ரஜினி, தாவாங்கொட்டையை மேலும் கீழும் ஆட்டி சப்புக் கொட்டும் சிவாஜி என்று ஒரே ரகளையாக இருக்கும் போது இன்ஸ்பெக்டர் வந்து விடுகிறார். ஆடிக் கொண்டிருக்கும் நயன் தாராவின் புட்டத்தில் விடுகிறார் ஒரு உதை. ஓடிப் போய் குப்புற விழுகிறாள் நயன்.
இன்ஸ்பெக்டர் அந்தப் பிச்சைக்கார கோஷ்டியை ஸ்டேஷனுக்கு அழைத்து வர வைத்ததன் நோக்கம், அவர்களை மிரட்டி அம்சவல்லியை அவர்களிடமிருந்து பிரித்து தாண்டவனிடம் அனுப்புவது. அந்த எண்ணத்துடன் கோஷ்டியின் தலைவனாக இருக்கும் பிச்சைக்காரனிடம் “டேய், நீ பொம்பளைங்கள கடத்துறியாமே?” என்று மிரட்டி அடிக்க, நயன்தாரா அழுது கொண்டே தன் ஜட்டி ப்ரா எல்லாவற்றையும் அவிழ்த்துப் போடுகிறாள். பார்த்தால் அவன் ஒரு கிழவன்!
Riot என்று சொல்வார்களே, அதுதான் இந்தக் காட்சியில் நடந்திருப்பது! தமிழ் சினிமாவையும், அதையே தங்களின் உயிர் மூச்சாகக் கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகத்தையும் இவ்வளவு தீவிரமாக இதுவரை யாரும் பகடி செய்ததில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. தமிழ்ச் சமூகத்தின் வழிபாட்டு உருவங்களாக இருக்கும் (Icons) எம்ஜியார், சிவாஜி, ரஜினி காந்த் போன்ற நடிகர்கள் இந்தக் காட்சியில் வரும் கூத்தாடிகளைப் போன்றவர்கள்தாம்; இவர்களுக்கும் அந்த வழிபாட்டு நாயகர்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் இவர்கள் தெருக்களில் நடித்து, தட்டை நீட்டிக் காசு பெறுகிறார்கள்; நாயக நடிகர்களோ கேமராவுக்கு முன்னால் நடித்து கோடிகளில் பணம் பெறுகிறார்கள். ’இம்மாதிரி ஆட்களிடம் கொண்டு போய் நாட்டை ஆளும் பொறுப்பை விடுகிறீர்களே, முட்டாள்களே’ என்று தமிழ்ச் சமூகத்தைப் பார்த்து எள்ளி நகையாடுகிறார் பாலா.
இந்தக் காட்சியில் வரும் எம்ஜியார், சிவாஜி, ரஜினிகாந்த், நயன்தாராவாக வரும் கிழவன் எல்லோருடைய ’பாடி லாங்வேஜ்’ மிக உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய ஒன்று. அதில்தான் பாலா தனது காட்டமான அரசியல் விமர்சனத்தை வைத்திருக்கிறார். இன்ஸ்பெக்டர் வந்து உதைத்ததும் எம்ஜியாரும், சிவாஜியும், ரஜினிகாந்தும் இருக்கும் இடம் தெரியாமல் எலி பதுங்குவதைப் போல் பதுங்குகிறார்கள்.
இந்தப் படத்தை ரஜினிகாந்த் பாராட்டியதாக அறிகிறேன். உலகத்திலேயே கொடுமையான விஷயம் என்னவென்றால், உங்களை ஒருவர் பகடி செய்யும் போது, அது உங்கள் மீதான பகடி என்றும், விமர்சனம் என்றும் உங்களுக்குத் தெரியாமல் போவதுதான்.
இதுபோல் படத்தில் ஏராளமான இடம் உண்டு.
ஸ்லம்டாகை விடவும் சிறந்த படமான ’நான் கடவுள்’ உலக அளவில் பேசாப்படாது என்பதற்கு இரண்டு காரணங்கள் என்று சொன்னேன். இரண்டாவது காரணம், இறுதிக் காட்சியில் ருத்ரன் குழந்தைகளைக் கடத்திப் பிச்சை எடுக்க வைக்கும் தாண்டவனை ஒரு நீண்ட ஸ்டண்ட் சண்டையின் முடிவில் கொல்கிறான்.
ருத்ரன் ஒரு அகோரி. அகோரி என்றால் கடவுள். மனித உருவில் வாழும் கடவுள். ஒரு மனிதனின் அடுத்த பிறவியையே தடுத்து நிறுத்தக் கூடியவன். சுடுகாட்டில் வாழ்பவன். பிணங்களைத் தின்பவன். ஐம்பூதங்களிலும் வசிப்பவன். நெருப்போ பூகம்பமோ அவனை எதுவும் செய்யாது. இதை ருத்ரனே நீதிபதியிடம் சொல்கிறான். இப்படிப் பட்டவன் ஏன் அந்த துஷ்டனை விஜய், விஜய் காந்த், ரஜினிகாந்த், விஷால், தனுஷ் போன்ற மற்ற சினிமா ஹீரோக்கள் மாதிரி ஸ்டண்ட் மாஸ்டர் சொல்லிக் கொடுத்தபடி பத்துப் பதினைந்து நிமிடம் ஸ்டண்ட் போட்டுக் கொல்ல வேண்டும்? தமிழ் மசாலா சினிமாவின் ஃபார்முலா என்ன? கடைசிக் காட்சியில் ஹீரோ மிகப் பெரிய ஃபைட் ஒன்றைச் செய்து வில்லனைக் கொல்லுவான். அதே ஃபார்முலாவை பாலாவும் பயன்படுத்தும் போது படத்தின் நம்பகத்தன்மை குறைகிறது.
***
நான் கடவுளுக்கு ஜெயமோகன் எழுதியிருக்கும் வசனம் குறித்து மேலும் ஒரு விஷயம். அகண்ட பாரதம் பேசும் இந்துத்துவவாதிகளின் நிலைமையீருந்து ஸ்லம்டாக் மில்லியனர் படத்தைத் தாக்கிய ஜெயமோகன், ஸ்லம்டாகை விடவும் பல மடங்கு தீவிரமாக இந்திய யதார்த்தத்தை வெளிக்காட்டியிருக்கும் ‘நான் கடவுளு’க்கு இவ்வளவு வலுவாக வசனம் எழுதிருப்பது எப்படி? இதே படம் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டு, அதற்கும் அவர் வசனம் எழுதியிருந்தால் அந்த ஆங்கிலப் படத்தை எப்படி எதிர்கொள்வார்?
ஒளிப்பதிவாளரான ஆர்தர் வில்ஸனும் பாராட்டப்பட வேண்டியவரே. என்றாலும், இந்தப் படத்தில் அவர் இன்னும் உழைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. சமயங்களில் ஒளிப்பதிவாளர் இயக்குநரையும் மிஞ்சி விடலாம். அது இந்தப் படத்தில் நடக்கவில்லை. மாறாக, ஆர்யா என்ற நடிகர் ருத்ரனாக வரும் போது அவரைப் பிரதானப் படுத்தும் கேமரா ரஜினிகாந்த் படங்களை நினைவூட்டுகிறது. உதாரணமாக, ருத்ரனின் அறிமுகக் காட்சியில் சிரசாசனத்தில் இருக்கும் ருத்ரனை கேமரா சுற்றோ சுற்று என்று சுற்றுகிறது.
***
படத்தில் பாராட்டப்பட வேண்டிய மற்ற இருவர் ஆர்யாவும், பூஜாவும். இந்தப் படத்துக்காக ஆர்யா தனது உயிரையே பணயம் வைத்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதன் மூலம் நடிப்பை ஒரு தவத்தைப் போல் கையாண்டிருக்கிரார். கலை என்பது வியாபாரம் அல்ல என்ற முக்கியமான செய்தியை ஆர்யா தனது சக நடிகர்களுக்குத் தெரிவித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு இது மிகப் பெரிய பங்களிப்பாகும்.
அடுத்து, பூஜா. ஆர்யாவுக்குக் கூறியது அனைத்தும் பூஜாவுக்கும் பொருந்தும். சதையை மட்டுமே காண்பித்து சினிமா பண்ணிக் கொண்டிருக்கும் நடிகைகள் மத்தியில் பூஜாவின் பாத்திரமும், இதற்காக அவர் எடுத்திருக்கும் முயற்சியும் போற்றுதலுக்குரியன. படத்தின் இறுதியில் அவருடைய நீண்ட பேச்சு பலருக்கும் எரிச்சலை உண்டாக்கியிருக்கிறது. மசாலாப் படங்களையே பார்த்துப் பார்த்துப் பழகிய நமக்கு ஒரு காலகட்டத்தின் ஒட்டு மொத்த துயரத்தையே சிற்சில வார்த்தைகளில் அடுக்கும்போது அதை எதிர்கொள்வதில் ஆயாசம் ஏற்பட்டு விடுகிறது. ஒரு சோக காவியத்தின் துயர முடிவையே அம்சவல்லியின் அந்த நீண்ட பேச்சு உணர்த்துகிறது. கிரேக்க நாடகங்களிலும் ஷேக்ஸ்பியரிலும் இதை இயல்பாகக் காண முடியும். பூஜா மற்றும் ஆர்யாவின் நடிப்பு தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும்.
’நான் கடவுள்’ உடல் ஊனமுற்றவர்களைப் பயன்படுத்தியிருக்கிறது என்றும், அவர்களுக்கு எதிராக இருக்கிறது என்றும் பரவலாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைப் போல் இந்தப் படம் பிச்சைக்காரர்களுக்கும், திருநங்கைகளுக்கும், இன்னும் பல விளிம்புநிலை மனிதர்களுக்கும் கூட எதிராக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டே போகலாம். இப்படிச் சொல்பவர்களுக்கு கலை பற்றிய தெளிவு இல்லை என்றே கருத வேண்டியிருக்கிறது. இந்தப் படத்தில் விளிம்புநிலை மக்களின் மீது நடத்தப் படும் குரூரமான தாக்குதல் எதுவும் இயக்குனர் செய்வது அல்ல; அது இந்தச் சமூகம் அவர்கள் மீது செலுத்தும் வன்முறை. இதை இவ்வளவு சுரணையுணர்வோடும், கோபத்தோடும் ஒரு கலா சிருஷ்டியாக மாற்றியிருக்கும் பாலாவுக்கு நாம் நன்றிதான் சொல்ல வேண்டுமே தவிர படத்தில் வரும் வில்லனையும் அவரையும் ஒன்றாகப் பார்ப்பது மதியீனம். இதே போன்ற குற்றச்சாட்டு ஸ்லம்டாக் இயக்குநர் மீதும் எழுந்தது என்பதை நினைவு கூர்க. மற்றபடி, இந்தப் படத்தின் மீது யாராவது புகார் சொல்ல வேண்டும் என்றால் அது முச்சந்திக்கு முச்சந்தி சிலையாக நிற்கும் நம்முடைய கடவுள்கள்தாம். பெரியாருக்குப் பிறகு கடவுளை இந்த அளவுக்குச் சாடிய ஒரு மனிதனை நான் கண்டதில்லை. (ஆசான் தங்களுடைய நம்பிக்கையற்ற வாழ்வைப் பற்றிச் சொல்லும் போது கடவுளை ’தேவடியாள் மகன்’ என்று ஏசுகிறான்.)
***
உலகின் க்ளாஸிக்குகளில் ஒன்றை உருவாக்க முனைந்த பாலா என்ற கலைஞனுக்குத் தலை வணங்குகிறேன்
(நன்றி: charuonline.com & உயிர்மை)
ராஜாவை விமர்சனம் செய்ய சாருவுக்கு சிறு தகுதி கூட இல்லை
பதிலளிநீக்குராஜாவை விமர்சனம் செய்ய சாருவுக்கு சிறு தகுதி கூட இல்லை
பதிலளிநீக்குஇந்தியப் பிரதமரை விமர்சிக்கலாம், அமெரிக்க ஜனாதிபதியை விமர்சிக்கலாம், ஐநா சபைத் தலைவரை விமர்சிக்கலாம், ஆனால் மேஸ்ட்ரோவாக இருப்பதால் இளையராஜாவின் இசையை மட்டும் விமர்சிக்கக்கூடாதா அர்ஜுன்? அற்புதமாக பல படங்களுக்கு இசையமைத்திருக்கும் இளையராஜா, இந்த அற்புதமான படத்திற்கு பொருத்தமில்லாத இசையைத்தான் படம் நெடுக பல இடங்களிலும் அமைத்திருக்கிறார். இது மேற்கத்திய சினிமாக்களின் பாதிப்பு. அவர்கள், எவ்வளவு சோகமான காட்சியாக இருந்தாலும், இசையில் அதை வெளிபடுத்தமாட்டார்கள். இப்போது பல தமிழ்ப் படங்களிலும் அந்த பாணி பின்பற்றப்படுகிறது. அதையேதான் இளையராஜாவும் செய்திருக்கிறார். ஆனால் இங்கே இது ஒரு நல்ல படத்தின் தரத்தைக் குறைத்துவிட்டது. இந்த படத்தின் இசையை பற்றிய சாருவின் விமர்சனம் மிகவும் சரியானதே. ஆனால் உங்களுக்கு அந்தளவு இசை ரசனை இருந்தால் மட்டுமே உங்களால் அதை உணர முடியும்.
பதிலளிநீக்குகருத்துரையிடுக