யாதும் ஊரே, யாவரும் கேளிர்.




தமிழர்கள்தான் அணுகுண்டை கண்டுபிடித்தார்கள், தமிழர்கள்தான் ஆங்கிலத்தை கண்டுபிடித்தார்கள் என்பதாக சிலபல ஆதாரங்களை காட்டி Share if you are proud to be a Tamilian என அதட்டும் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்களை அனுபவித்திருப்பீர்கள். ம்ம். பண்ணியும் இருப்பீர்கள். அணுகுண்டை கண்டுபிடித்தார்களா, ஆட்டுக்குட்டியை கண்டுபிடித்தார்களா எனக்கு தெரியாது, ஆனால் உலகத்துக்கு உபயோகமான பல அற நெறிகளை அறிமுகப்படுத்தியவர்கள் தமிழரே. ஆனால் அவற்றையெல்லாம் நாம் கருத்திலெடுப்பதில்லை. பின்பற்றுவதும் இல்லை. எத்தனையோ அறிய கருத்துக்கள், ஆச்சரியப்படுத்தும் அறிவியல் உண்மைகள், கணிதங்கள், வானவியல் கணிப்புக்கள்.. எல்லாமே எமது பண்டைய இலக்கியங்களில் உள்ளன. நமக்கு வெளியே தெரியும் போலி அறிவியல் (Pseudoscience) தோற்றங்களை நாம் தூக்கிப்பிடிக்கிறோம்.

‘யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்கிற வரிகளை நீங்கள் அடிக்கடி சந்தித்திருப்பீர்கள். கேளிர் என்பதை கேளீர் என தவறாக புலப்படுத்தும் சந்தர்ப்பங்களையும் சந்தித்திருப்பீர்கள். எவ்வாறாயினும், எல்லாமே எங்களுக்கு ஊர்தான், எல்லாருமே நமக்கு சொந்தம்தான் என்கிற உலகப் பொது மானிடக் கருத்தை, சமத்துவத்தின் ஆணிவேரான பிரேரணையை முன்வைத்த முதலாமவன் தமிழன்தான். “எனக்கு வேர்கள் இல்லை, கால்கள்தான் உண்டு என்கிற சே குவேராவின் கருத்தை எப்போதோ போகிறபோக்கில் சொல்லிவிட்டுப் போனவன் ஒரு தமிழன். ஆனால் இதன் அழகிய முரண் என்ன தெரியுமா? அந்த முதல்வன் தமிழன் என்பதற்காக நாம் பெருமைப்பட்டுக்கொள முடியாது. தமிழன்தான் கூறினான் என்று கூப்பாடு போட்டால், நாம் உலக மாநிடத்திளிருந்து நம்மை தனிமைப்படுத்திக் காட்டுவதாகாதா? பிறகு யாதும் ஊரே வாய்ப்பற்ற வாதமாகிவிடாதா?

யாதும் ஊரே என்பது பொதுவுடைமைக் கருத்து, யாவரும் கேளிர் என்பது சமதர்மக் கருத்து. இதைவிட வேறு என்ன சொல்லிவிட முடியும் ஒருவனால்? ஆனால் இன்னும் சொல்லப்பட்டிருக்கிறது அந்தப் பாடலில். 


யாதும் ஊரே, யாவரும் கேளிர்.
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன,
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே, 
முனிவின், இன்னா தென்றலும் இலமேமின்னொடு
வானம் தன்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று
நீர்வழிப்படு உம் புணைப்போல் ஆர் உயிர்
முறைவழிப் படு உம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியிற்
பெரியாரை வியத்தலும் இலமே,
சிறியாரை இகழ்தல் அதனிலும் இலமே.

- நமக்கு ஏற்படும் நன்மைக்கும் தீமைக்கும் நாமே காரணமும் பொறுப்புமாவோம். புறக்காரணிகளை குறைகூறுவதில் பயனில்லை. நாம் என்ன செய்தோமோ, அதைப்போறுத்தே இன்பமோ, துன்பமோ நம்மை சேரும், அல்லது அற்றுப்போகும். எனவே துன்பம் வரும்போது வருந்துவதோ, இன்பம் வரும்போது மகிழ்வதோ இங்கில்லை. எவ்வாறு வான்மழை வெள்ளத்தால் நிரம்பிய ஆற்றில் தோணியானது தன்பாட்டில் கொண்டுசெல்லப்படுகிறதோ, அதுபோலவே வாழ்க்கையால் நாம் கொண்டுசெல்லப்படுகிறோம் என்பதையும் நாம் மிக நன்றாக அறிவோம். எனவே பெருமைமிக்கவர்களாகவுள்ள பெரியோரை பார்த்து நாம் வியப்பதுவுமில்லை, அதைவிட, சிறியோரைப்பார்த்து நாம் இகழ்வதுமில்லை. எல்லாமே ஊர்தான், எல்லோருமே நமக்கு உறவினர்தான். -

புறநானூற்றுப் பாடல் இது. வாழ்க்கையை நாங்கள் மிகவும் குழப்பிக்கொண்டுள்ளோம். நிலத்துக்கு, சொத்துக்கு என உரிமைச்சண்டைகள், அடையாளம் தவிர்த்து வாழமுடியாத தலைக்கனங்கள், பாரபட்சங்கள், பொறாமைகள், நம்பிக்கைகள், மாதங்கள், சாதிகள், விரதங்கள், தேடல்கள், துரத்தல்கள்.. எத்தனையோ. ஒரே ஒரு விஷயத்தை நன்றாக புரிந்துகொண்டால் நம் துன்பங்களில் பாதி அற்றுப்போய்விடும். தீதும் நன்றும் பிறர்தர வாரா. தெய்வம்கூட.

முன்னமே சொல்லிவிட்டதுபோல இதிலே தமிழர்கள் பெருமைப்படுவதற்கு ஒன்றுமே இல்லை என்று ஆகிவிட்டபோதும் நாம் வெட்கப்படுவதற்கு இதிலே ஒரு விஷயம் இருக்கிறது. ‘என்ன, இதை நாம் பின்பற்றாது விட்டுவிட்டோம் என்பதுதானே என்கிறீர்களா? அந்தக் கேவலத்தைத்தான் நாம் எல்லா நல்ல கருத்துக்களுக்கும் செய்கிறோமே, இது வேறு அவமானம்.

இது ஒரு புறநானூற்றுப் பாடல். பெரும்பாலான புறநானூற்றுப் பாடல்களைப்போல இதற்கும் பாடியவரின் உண்மையான பெயர் கிடைக்கவில்லை. நாமாக ஒரு பெயரை வைத்து கணியன் பூன்குன்றனால் பாடப்பட்டது என வரலாற்றில் இதை பதிவு செய்துவிட்டோம். இதில் கணியன் என்பது ஒரு சாதிப் பெயர். நல்ல நிமித்தங்களை சொல்லும் தொழிலை செய்பவர்களின் இனத்தின் பொதுப்பெயர். பூங்குன்றம் என்பது ஒரு ஊரின் பெயர். பாடியவரின் ஊர் அதுதான். ஆக, எல்லாரும் பொதுவே, எல்லாம் எனதூரே எனப் பாடியவனின் பெயர் ஒரு தொழிற்பெயராலும், ஒரு ஊர்ப்பெயராலும் ஆனது. பிறகு ஏனையா தமிழரை மறுபடி மறுபடி கடல் கொள்ளாது?
(நீதுஜன் பாலசுப்ரமணியம்)

3 கருத்துகள்

  1. இது ஆழமான சிந்தனைகளை கொண்ட மற்றும் எனக்கு மிகவும் பிடித்த தமிழ் பாடல். இந்த தகவலை பரிமாரியதர்க்கு வாழ்த்துக்கள்...

    குறிப்பு: நீங்கள் கவிதையில் ஒரு வரி தவறவிட்டீர்.

    வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; **முனிவின், இன்னா தென்றலும் இலமே;**

    தகவலை புதுபிப்பீர்கள் என நம்புகிறேன்..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை