மறக்கடிக்கப்பட்ட நடிகர் வடிவேலு-மீண்டும் எழுவாரா?




சதுரங்கத்தில் எதிராளியின் முகியத்துவம் கூடிய காய்களை வெட்டுவதற்காக நமது பக்கத்திலுள்ள முக்கியத்துவம் குறைந்த காய்களை பலியிடுவது வழக்கம். அரசியல் சதுரங்கத்தில் கருணாநிதி செய்வதுவும் இதுவேதான். எதிராளியின் பலமான பக்கத்தை அறிந்து, அதே பக்கத்தில் பலமான, அல்லது பலமானவர்போல தோன்றும் ஒருவரை வைத்து எதிராளியை பலவீனப்படுத்த முயல்வது. இது ஒரு பலியாட்டம். பலியிடுவது என்பது கருணாநிதிக்கு கரும்பு ஜூஸ் குடிப்பதுபோல என்பது உலகத்துக்கே தெரிந்த விடயமாதலால், மேலும் விரிவாக விளக்கத்தேவையில்லை.



 
 

பலி என்று வந்துவிட்டால் கருணாநிதி சொந்த மகன் என்றுகூடப் பார்ப்பதில்லை என்பதுதான் அவல நகையே. எம் ஜி ஆர் மக்களின் மனதிலே இதய தெய்வமாக உருவெடுத்துக்கொண்டிருந்த காலத்திலே, அவரை வீழ்த்த தனது சொந்த மகனை – நல்ல பாடகராக வரவேண்டிய, ஆசைப்பட்ட தனது மகனை – எம் ஜி ஆர் வகை நடிகராக்கி, அவரது வாழ்க்கையையே சீரழித்து, சின்னாபின்னமாக்கியது உலகத்துக்கு தெரிந்ததே. அப்படி சிக்கி சீரழிந்த ஆயிரக்கனக்கானவர்களுள் ஒருவர்தான் நமது வடிவேலு.

என்னதான் தரங்குறைந்த நகைச்சுவையாக தனது நகைச்சுவைக் காட்சிகளை அமைத்துக்கொன்டாலும், வடிவேலு ஒரு அற்புதமான நடிகன் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் பெரும்பாலும் இல்லை. நன்றாக அமைக்கப்பட்ட நகைச்சுவைக் காட்சிகளில் அவர் நடிக்கும்போது அவை உன்னதமானவையாக எழுவது நாம் அனுபவப்பட்டதே. ஸ்லப்ஸ்டிக் நகைச்சுவை நடிகராக அவர் அடையாளம் காணப்பட்டாலும், அவரது பணியானது தனியானதாக அமைந்ததாகவே உள்ளது. அப்படியான ஒரு நகைச்சுவை நடிகர், எங்கிருந்து உயிர்த்தெழுந்தார்? அவரது பின்புலம் என்ன? பார்ப்போம்.

மதுரையில் படச்சட்டங்களுக்கு கண்ணாடி வெட்டும் தொழிலை செய்பவர் ஒருவருக்கு மகனாகப் பிறந்தவர் வடிவேலு. ஊரில் நாடக நடிப்புக்கள், பாட்டுகள் என்று பிரபலமாக இருந்த இவர், ஒருமுறை அங்கே ராஜ்கிரண் போயிருந்தபோது அவருக்குஅறிமுகம் செய்யப்பட்டார். இவரது திறமையில் ஈர்க்கப்பட்ட ராஜ்கிரண், வடிவேலுவை சென்னைக்கு அழைத்தார். அவ்வாறாக சென்னைக்கு வந்த வடிவேலு, ராஜ்கிரனின் அலுவலகத்தில் தங்கியிருந்தபோது கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில் ராஜ்கிரண் நடித்துக்கொண்டிருந்த ‘என் ராசாவின் மனசிலேபடத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். (1991) அதன்பின்னர் தொடர்ச்சியாக கஸ்தூரிராஜா வகை இயக்குனர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. முக்கியமாக தனது இரண்டாவது படத்திலேயே, அந்தக் காலத்தின் அசைக்கமுடியாத நகைச்சுவை அரசனாக வல்லரசு செய்துகொண்டிருந்த கவுண்டமணியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து கவுண்டமணி செந்தில் இணையுடன் மூன்றாவது நடிகராக வந்துபோய்க்கொண்டிருந்தார்.

வடிவேலுவின் கிரகங்களெல்லாம் அவருக்கு நல்லதுசெய்ய முடிவெடுத்தது என்று பிறகு பலர் சொள்ளவாராக தான் திரைத்துறைக்கு வந்து இரண்டு வருடங்களுக்குள்ளேயே கமலஹாசனின் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அவரது நல்ல அபிப்பிரயத்தியும் சம்பாதித்தார். (சிங்காரவேலன் என்ற அந்தப் படத்தில் கவுண்டமணியும் நடித்திருந்தார். வழக்கமாக தனக்குக் கீழே நடிப்பவர்களை போட்டு மிதிக்கும் வழக்கமுடையவர் கவுண்டர். அவ்வாறாகவே கவுண்டர் மிதிக்க, கமலின் அனுதாப வாக்குக்களை வென்றார் வடிவு.) கிரகங்கள் போதாதென்று உபகோள்களும் நல்லது செய்ய, கமல் தயாரித்த அடுத்த படமான தேவர் மகனில், சிவாஜி, கமல் இருவருடனும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் வடிவேலு. தனது சிறப்பான நடிப்பால் சிவாஜியையே கவர்ந்தார் வடிவேலு.

தொடர்ந்து வளர்ந்துகொண்டிருந்த வடிவேலுவுக்கு 2001 இல் வெளியான ப்ரெண்ட்ஸ் படம் பெரிய புகழை தேடித்தந்தது. தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் வடிவேலு முக்கிய அங்கமானார். அதனைத்தொடர்ந்து 2003 இல் வெளியான வின்னர் திரைப்படம் அவரது திரைத்துறை வாழ்க்கையையே மாற்றியது. அத்துடன் சத்யராஜ், பார்த்திபன், சரத் குமார் அர்ஜுன் போன்ற நாயகர்களுடன் இவர் சேர்ந்து நடிக்கும் படங்கள் எல்லாமே பெருவெற்றி பெற்றன. அதே காலகட்டத்தில் கவுண்டமணி தனது தனிப்பெரும் ராஜ்ஜியத்தை இழக்க தொடங்கவும், வடிவேலு, மற்றும் விவேக்கின் கைக்குள் நகைச்சுவை அரசாங்கம் வந்தது.

போதாததற்கு 2005 இல் சந்திரமுகி என்கிற மிகப்பெரும் வெற்றிப்படமும் அமைந்துபோய், விவேக்கின் நகைச்சுவையில் இருந்த உயர் தன்மையும் போய்விட, வடிவேலுவின் கைக்குள் அந்த அரசாங்கம் விழுந்தது. அடுத்த வருடமே இவர் நாயகனாக நடித்த இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படமும் வெளியாகி சக்கைபோடு போட, ஒவ்வொரு வீட்டிலும் ஒரு அங்கமாகவே ஆகிப்போனார் வடிவேலு. அங்கேதான் அத்தனை கிரகங்களின் நல்ல பார்வையை அடித்து, சனியின் பார்வையாக வடிவேலுவை பார்த்தார் கருணாநிதி. 


ஏற்கெனவே புகழ் தலைக்கேறி, தான்தான் அரசன் என்பதாக நடந்துகொண்டார் வடிவேலு. தனக்கு பெரும் திருப்பத்தை இருமுறை (வின்னர், கிரி) தந்த சுந்தர் சி யுடன் முறுகல் உள்ளிடத் பல சிக்கல்களில் சிக்கினார் வடிவேலு. விஜயகாந்துடனும்2008 இல் ஒரு சிக்கல் ஏற்பட, அது நீதிமன்றம் வரை போய், அந்த வழக்கு உரைக்கு வரும் முன்னாளிரவு வடிவேலு வீட்டில் குண்டர்கள் கல்வீச, தொடங்கியது உண்மையான சனி.(செப்டம்பர் 21, 2008 ) விஜயகாந்துடன் முன்னரே இருந்த முரண்பாட்டால்தான் நீதிமன்றம்வரை சென்றாலும்,கல்லெறி பிரச்சனை வடிவேலுவை மிகவும் பாதித்ததாக அவர் காட்டிக்கொண்டார். அத்துடன் சாடை மாடையாக காட்டிவந்த அரசியல் ஆர்வத்தை வெளிப்படையாக காட்டினார் வடிவேலு. 2011 தேர்தலில் தான் யார் என்பதை காட்டப்போவதாக சூளுரைத்தார். கல்லெறிபட்ட கண்ணாடிகளை பலநாட்கள் அப்படியே வைத்திருந்து சகலருக்கும் காட்டியது, தேவையில்லாமல் விஜயகாந்தின் தனிப்பட்ட பல விடயங்களை அம்பலமாக்கியது, அவரை நாகரீகமின்றி திட்டியது, உயிர் ஆபத்து இருப்பதாக போலிஸ் பாதுகாப்பு கேட்டு நாடகமாடியது என பல பாமரத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டார் வடிவேலு. போதாததற்கென்று சிங்கமுத்துவுடன் நிலக் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான தகராறு என்றும் முரண்பட்டார். மக்கள் தங்கள் வீட்டில் ஒருவனாக பார்த்த பிம்பத்தை இழந்தார்.


இந்த அத்தனை நாடகங்களையும் அரங்கேற்றிய, அல்லது தானாக நடந்திருந்தாலும், அவற்றால் பெரும் ஆதாயம் அடையப்போகிற சூத்திரதாரியாக கருணாநிதி இவர்ரைஎல்லாம் சிறு நகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார். கட்சி தொடங்கிய கொஞ்ச நாட்களுக்குள்ளாகவே மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை பெற்று வளர்ந்துவரும் , தங்கள் வாக்குகளில் பெரும்பங்கை கூறுபோடும் விஜயகாந்தை அடிக்க ஒரு காயே கருணாநிதியின் அப்போதைய அவசரத் தேவையாக இருந்தது. விஜயகாந்துக்கு இணையாக, சினிமாவிலும், மக்களிடத்திலும் செல்வாக்கு பெற்ற காய் எதுவும் அப்போது கருணாநிதியிடம் இருக்கவில்லை. எனவே, விஜயகாந்த் மேல் காழ்ப்புடைய, அவருக்கு இணையான ஒரு காயை தயாரிக்க வேண்டிய கட்டாயம் கருணநிதிக்கு ஏற்பட்டது. அகப்பட்டது வடிவேலு. விஜயகாந்தும் வடிவேலுவும் ஒரே மண்ணை சேர்ந்தவர்கள். மதுரை. கிராமத்து மக்களின் மனங்களில் இடம்பிடித்தவர்கள். எம் ஜி ஆரின் ரசிகர்களாக தங்களை காட்டிக்கொண்டவர்கள். எனவே விஜயகாந்துக்கு மாற்றாக வடிவேலு தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்கள் செல்வாக்கு முன்னெப்போதும், யாருக்கும், இல்லாதளவு இருந்தபோது கவுண்டமணி என்கிற நகைச்சுவை நடிகர் எடுக்காத முடிவை வடிவேலு எடுத்தார். அரசியலில் குதித்தார்.

2011 ஏப்ரலில் நடந்த தேர்தலில் விஜயகாந்தை கூண்டோடு அழிக்கப்போவதாக சொல்லி பிரச்சாரக் களமிறங்கினார் வடிவேலு. விஜயகாந்தையும் அவர் கூட்டணி அமைத்த கட்சிகளின் தலைவர்களையும் தனிப்பட்ட முறையில் தாக்குவதாகவே அவரது தேர்தல் பிரச்சாரம் அமைந்தது. அரசியல் நாகரீகமோ சபை நாகரீகமோ அவரது பேச்சில் வெளிப்படவில்லை. எனினும் அவர் பிரச்சாரம் செய்யும் இடங்களிலெல்லாம் மக்கள் கூட்டம் அலைமொதியதையும், அவ்வேளைகளில் விஜயகாந்த் பொது இடங்களில் சற்று அநாகரீகமாக நடந்துகொண்டதும், மேலெழுந்த வாரியான ஊகத்தில் விஜயகாந்துக்கு பாதகமானதாகவே கருதப்பட்டது. ஆனால் உண்மையான பொதுசன உளவியலில் இரண்டுமே விஜயகாந்துக்கு சாதகமான அம்சங்களே.
வடிவேலு ஒரு பிரபலமான நடிகர். அவர் தங்கள் வீதிக்கு வந்திருக்கிறார் என்றால் யாரும் போய் பார்க்காமல் இருக்கமாட்டார்கள். ஆனால், அதற்காக அத்தனை பேருமே வடிவேலுவுக்கு பின்னால் அணிதிரள்வோர் என எடுத்துக்கொள்ளக் கூடாது. படங்களில் முட்டாளாகவும், சார்ந்து வாழ்வோனாகவும், வேறுபல விதங்களில் கேவலமானவராகவும் காட்டப்பட்ட வடிவேலுவை தலைவனாக ஏற்றுக்கொள்வது உளவியல் ரீதியாக கடினம். வெறுமனே கத்துவதை பார்த்து ரசித்துவிட்டுப் போக வந்த கூட்டம்தான் அது. 

விஜயகாந்தோ, வேறு யாரோ.. தமிழக மக்களை பொறுத்தவரை அரசியல்வாதிகளுக்கு ஒரு விதி வைத்திருக்கிறார்கள். ‘நீ தனிப்பட்ட வாழ்க்கையில் எத்தனை கேவலமானவனாகவும் இரு, எங்களுக்கு கவலையில்லை, அதை எங்களிடம் வெளிப்படையாக ஒத்துக்கொள்.என்பதுதான் அது. எனவே, விஜயகாந்த் குடித்ததுவோ, வேட்பாளரையும், தனது உதவியாளரையும் அடித்ததுவோ மக்களை பொறுத்தவரை ஒரு பிரச்சனையே இல்லை. அவரது வெளிப்படை நடத்தையைப்பார்த்து விரும்பிவேண்டுமானால் இருக்கலாம்.


எல்லாவற்றுக்கும் பதில்கூறியது தேர்தல். விஜயகாந்தும், வரத்து கூட்டணிக் கட்சிகளும் பெருவெற்றி பெற, கருணாநிதி தலைமையிலான கூட்டம் மண்ணை மட்டுமல்ல, மண்ணடி நீர்வரை கவ்வியது. தி மு க வராற்றின் பெரும் சோகமாக, எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்தும் பறிபோனது. ஆட்சி போனதும் கருணாநிதி வழக்கமாக செய்வதுபோல், கவிதை எழுதுதல், திரைக்கதை எழுதுதல் என தனது எழுத்துப்பணியை தொடர்ந்தார். (ஆட்சியில் இருக்கும்போது மட்டும் என்ன,  மன்மோகனுக்கு கடிதம், சோனியாவுக்கு தந்தி என எழுத்துப் பணிதனே செய்தார் என்கிறீர்களா? சரிதான். விடுங்கள்.)

பிரச்சாரக் காலத்தில் மக்களிடம் இருந்த பெரும் கேள்வி நிதர்சனமானது. வென்றால் கருணாநிதியின் வலது கை, தோற்றால்?

தேர்தலில் தோற்றவுடனேயே முதல் வேலையாக கருணாநிதியும் திரையுலகமும் வடிவேலுவை கைகழுவினார்கள். அத்தனை உச்சத்தில் இருந்தவர் தலைகுப்புற விழுந்தார். இனி எழவே முடியாதென்று ஆனது அவரது கலையுலக ஆட்டம். கிடைத்த இடைவெளியில் சந்தானம் பெரும் நகைச்சுவை நடிகராக உருவெடுத்தார். தற்போது அவர் நாகரீகம் கருதி வடிவேலுவின் மார்க்கெட்டை தான் பிடிக்கவில்லை என கூறிக்கொண்டாலும், அவருடையதும், விவேக்குடையதுமான ஒட்டுமொத்த சந்தையையுமே அவர் கைப்பற்றிக்கொண்டார். இடைக்காலத்தில் ஏனோ தெரியவில்லை, இளைஞர்களுக்கு கவுண்டமணி மேல் ஒரு பாசம் வர, காலத்துக்கேற்ற மாற்றம் செய்து கவுண்டமணி நகைச்சுவைகளை மீளுருவாக்கும் சந்தானம் மேல் அவர்களுக்கு பாசம் பொத்துக்கொண்டது. வடிவேலுவின் இருந்த இடம் துடைத்து கழுவி காயவைக்கப்பட்டது.

தற்போது பேட்டிகளில் வடிவேலு தனக்கு எப்போதுமே மார்கெட் போனதில்லை என்றும், இப்போதுகூட தன்னிடம் வாய்ப்புக்கள் குவிவதாகவும், ஆனால் தனது மீள் நுழைவு அதிரடியாக இருக்கவேண்டும் என்பதற்காக தான் நாயகனான நடித்து வரும் படமே முதல் வருமென்றும் கூறிவருகிறார். இம்சை அரசனின் இரண்டாம் பாகம், அல்லது தெனாலி ராமன் கதை, இவற்றில் ஒன்று வடிவேலுவின் மீள் நுழைவக அமையும். (இம்சை அரசன் என்ன செய்யும் என்பது இயக்குனரின் கையில் உள்ளது. ஆனால் தெனாலி ராமன் வந்தால் அது படுதோல்வி அடையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. சிறுவயதுமுதலே மனதில் கற்பனை செய்து வைத்திருக்கும், அதி புத்திசாலியான தெனாலி ராமனின் பிம்பத்தை இவரால் கொடுக்க முடியாது.)


எது எவ்வாறோ, வடிவேலுவை காலம் மன்னித்து, மறுபடி ஒரு வாய்ப்பு வழங்குமா, அது சரியாக அமையுமா, இனியாவது வடிவேலு தன நிலையை உணர்ந்து அதற்கேற்ப நடப்பாரா...
 பார்ப்போம்

Post a Comment

புதியது பழையவை